கிணத்துக்கடவு:'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் - பட்டணம் ரோட்டில் உள்ள குட்டையை, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட, செட்டியக்காபாளையம் மற்றும் பட்டணம் பகுதிகளுக்கு இடையே குட்டை உள்ளது. இந்த குட்டை துார்வாரப்படாமல் உள்ளதால், செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. மேலும், இதை சுற்றிலும் பெரும்பாலும் விவசாயம் நிரந்தர பகுதிகளாகவே உள்ளன.
இங்குள்ள விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்குகிறது இந்த குட்டை. கோடை காலத்தில், குட்டையில் உள்ள தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் விதமாக இருந்தது. தற்போது, குட்டை, காடு போல் உள்ளதால் பாசனத்துக்கு பயனில்லாமல் இருந்து வந்தது.
இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இந்த குட்டையை வேளாண் பொறியியல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த குட்டையை அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் வாயிலாக, துார்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.