உடுமலை;பிரசித்தி பெற்ற, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி நீண்ட காலமாக இழுபறியாகியுள்ளது. வனத்துறை அனுமதியுடன் ஹிந்து அறநிலையத்துறையினர் பணிகளை மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.
ஆன்மிக மற்றும் சுற்றுலா தலமாக உள்ள இங்கு, அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்கம் அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல்குளம், படகு இல்லம் ஆகியவை அமைந்துள்ளன.
மேலும், திருமூர்த்திமலை மேல், வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு ஹிந்து அறநிலையத்துறையின் கீழ், அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பஞ்சலிங்க அருவியில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை.
கழிப்பிடம், பெண்களுக்கான உடை மாற்றும் அறை மற்றும் அடிவாரத்தில், வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாமல், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த, 2008ல், அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், சிக்கி, 13 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அப்போதைய தி.மு.க., அரசு சார்பில், அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டது.
பஞ்சலிங்க அருவி மற்றும் அடிவாரத்திலுள்ள கோவிலைச்சுற்றிலும், 50 ஏக்கர் நிலத்தை ஹிந்து அறநிலையத்துறைக்கு ஒப்படைக்கவும் கோரிக்கை எழுந்தது. ஆனால், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், 'திருமூர்த்திமலை மற்றும் பஞ்சலிங்க அருவி பகுதியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த போதிய இடமில்லை. பல முறை கருத்துரு அனுப்பியும், வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், பல்வேறு திட்ட பணிகள் முடங்கியுள்ளது,' என்றனர்.
தமிழக அரசு, வனத்துறை இடத்தை, ஹிந்து அறநிலையத்துறைக்கு ஒதுக்கீடு செய்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.