விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 5 பேரும் உயிரிழந்தனர். எனவே, இந்த இரு மாவட்டங்களில் மட்டும் கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
மருத்துவமனையில் பலரும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.,க்கள் உட்பட பல போலீஸ் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வழக்கு சி.பி.சி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், டி.ஜி.பி., உத்தரவில், இரண்டு நாட்களில், 2461 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், 13ம் தேதி இரவு, மரக்காணம் இ.சி.ஆரில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தனர்.
இதனால், 44 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், புதுச்சேரி பிம்ஸ் மற்றும் ஜிப்மர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சுரேஷ், தரணிவேல், ராஜமூர்த்தி, மலர்விழி, மண்ணாங்கட்டி, சங்கர் ஆகிய ஆறு பேர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில், 21 பேர் ஆபத்தான நிலையில் இருந்தனர். நேற்று காலை 8.00 மணியில் இருந்து மாலை 6.00 மணி வரை, எக்கியர்குப்பத்தைச் சேர்ந்த கேசவேல், 60, சரத்குமார், 54, விஜயன், 58, ஆப்ரகான், 48, மற்றொரு விஜயன், 50, சங்கர், 58, ஆகிய ஆறு பேர் அடுத்தடுத்து இறந்தனர்.
இதுவரை, ஒரே கிராமத்தைச் சேர்ந்த, 14 பேர் கள்ளச்சாராயத்திற்கு பலியாகி இருப்பதால், கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து, ஆறுதல் கூறினார். உயிரிழப்பு ஏற்படாத வகையில், தரமான சிகிச்சை அளிக்க, மருத்துவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து, முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக, தலா, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: மாவட்ட காவல் துறையும், அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்கப் பிரிவும், கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதில், எவ்வித சமரசத்துக்கும் இடம் அளிக்கக் கூடாது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும், 'எத்தனால்' போன்ற ரசாயனங்களை தவறாக பயன்படுத்துவதை, மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றும் காவலர்கள், தீவிர கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு இல்லாத காவலர்கள் மீது, உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த, இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாக ரீதியாக, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி.,க்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவர். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
பிரச்னையின் மூல காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை முற்றிலுமாக ஒழிக்கவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய சில மூலப் பொருட்கள், கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்துவதை தடுக்கவும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த, கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் பொன்முடி, வேலு, அன்பரசன், மஸ்தான், உள்துறை செயலர் அமுதா, டி.ஜி.பி., சைலேந்திரபாபு கலந்து கொண்டனர்.
விழுப்புரம் எஸ்.பி., - டி.எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள் உட்பட மேலும் பலரும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, மரக்காணம் கள்ளச்சாராயம் விற்பனை வழக்கில் தலைமறைவாக இருந்த முத்து, ஆறுமுகம், ரவி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மண்ணாங்கட்டி என்பவரை தேடி வருகின்றனர்.
மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராயத்திற்கு எதிராக அதிரடி சோதனையில் ஈடுபட, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி, மாநிலம் முழுதும், இரண்டு நாட்களாக, கள்ளச்சாராயம் தொடர்பாக, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,461 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த ஆண்டு கள்ளச்சாராயம் தொடர்பாக, 55 ஆயிரத்து, 474 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,534 பெண்கள் உட்பட, 55 ஆயிரத்து, 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 2.55 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 79 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டு ஆட்சிக்கு மரணங்களே சாட்சி
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் இந்தாண்டு கொள்கை விளக்க குறிப்பில், 'தமிழகத்தில் 14 ஆண்டுகளாக கள்ளச்சாராய மரணங்கள் நடக்கவில்லை' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது, மீண்டும் தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது, ஆட்சியாளர்களின் கையாளாகத்தனத்தையே காட்டுகிறது. 200க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதன் வாயிலாக, இத்தனை நாட்கள் அவர்கள் அரசுக்கு தெரிந்தே, கள்ளச்சாராயம் விற்பனை செய்தனர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது அரசு. இரண்டு ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு, கள்ளச்சாராய மரணங்களே சாட்சி.
- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்.
கள்ளச்சாராய விற்பனை பற்றி சட்டசபையில் கூறிய போதே கவனத்தில் கொண்டிருந்தால், உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். இவற்றுக்கெல்லாம் முழு பொறுப்பு முதல்வர் ஸ்டாலின் தான். அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து, தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும்.
விஷச்சாராய வினியோகம் நீண்ட காலமாக நடந்து வருவதை, போலீஸ் துறை தடுக்க தவறி விட்டதால், இத்தகைய கோரமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மதுவிலக்கு அமல் பிரிவு என, தனியாக செயல்பட்டாலும், இத்தகைய உயிரிழப்புகளை தடுக்காதது மிகுந்த வேதனை தருகிறது. கள்ளச்சாராயம் விற்பனைக்கு, அப்பகுதி போலீஸ் தான் பொறுப்பேற்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த ஏழு பேர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில், ராஜ், சங்கர் ஆகிய இருவரும், நேற்று காலை, 8:30 மணிக்கு, மருத்துவமனையில் இருந்து தப்பியோடினர்.நேற்று மாலை, 4:30 மணிக்கு இந்த மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் அன்பரசன், வேலு, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உடன் இருந்தனர்.