உடுமலை:பள்ளி மாணவர்களுக்கு, புதிய கல்வியாண்டுக்கு தேவையான நோட்டு மற்றும் புத்தகங்கள் தருவிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோடை விடுமுறை முடிய இன்னமும், 14 நாட்கள் மட்டுமே உள்ளன. ஆறு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள், ஜூன், 1ம் தேதி; ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை ஜூன், 5 ம் தேதி துவங்கும்.
இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பராமரிப்பு, உள்கட்டமைப்பு பணிகள் துவங்கியுள்ளது. ஒருபுறம் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
அவ்வகையில், அரசு பாடநுால் கழகத்தில் இருந்து திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியருக்கு தேவையான, 1.60 லட்சம் புத்தகங்கள் தருவிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் இருந்து லாரிகள் வாயிலாக எடுத்துவரப்பட்ட, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள், திருப்பூர், 15 வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நோட்டுகள் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான புத்தகங்கள், திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு புத்தகம் மட்டுமே தருவிக்க வேண்டியுள்ளது. மொத்தம், 85 சதவீத புத்தகங்கள் வந்துள்ளது, மீதி புத்தகங்கள் 20ம் தேதிக்குள் வந்து விடும்.
அதற்கேற்ப, தாலுகா வாரியாக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். பள்ளி திறந்தவுடன், மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகிக்கப்படும்.
இவ்வாறு, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.