சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து, புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ., துாரத்திற்கு 4,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
ஜி.எஸ்.டி., சாலையொட்டி அமையவுள்ள இந்த வழித்தடத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலுார், கிளாம்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் ஒப்படைத்து, ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த தடத்தில், பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்களும் அமைவதால், இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்க திட்டத்தில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி., சாலையின் இடது புறத்தில் 27 மீட்டர் உயரத்தில் மேம்பால பாதை அமைக்க இருந்தோம். தற்போது, 7 மீட்டர் வரை குறைக்கப்பட்டு உள்ளது.
இதனால், குரோம்பேட்டை, சானட்டோரியம், தாம்பரம் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரிய நடைமேம்பாலங்கள் இடிக்கப்படும்.மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பின், இந்த பாலங்களை மீண்டும் சீரமைத்து வழங்குவோம்.
கிளாம்பாக்கம் புது பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ள நிலையில், பயணியருக்கான இணைப்பு போக்குவரத்து வசதியாக, இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் அவசியமானதாக இருக்கும். தமிழக அரசு, விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.