காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மார்ச் மாதம் துவக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ல் துவங்கினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்த கோடை மழையால் கத்திரி வெயிலிலும் குளிர்ச்சி நிலவியது.
மூன்று நாட்களாக காஞ்சிபுரத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று, 48 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியது. இது பாரன்ஹீட் அளவில், 118 டிகிரியாக பதிவானது.
மாலை 5:45 மணியை கடந்தும் காஞ்சிபுரம் நகரில் அனல் காற்று வீசியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், தலை சுமை, நடைபாதை வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், போக்குவரத்து காவலர்கள், போஸ்ட்மேன்கள், கூரியர் ஊழியர்கள், வீடுகளுக்கு சிலிண்டர், வாட்டர் கேன் போடுவோர் என, அனைவரும் வெயிலில் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
அதேபோல வீடுகளில் மின் விசிறி ஓடினாலும், அனல் காற்றே வீசியதால், முதியோர், கர்ப்பிணியர், குழந்தைகள் அவதிக்குள்ளாகினர்.
வெயிலில் தாகத்தை தணிக்க நீர்மோர், குளிர்பானம், ஜூஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டத்தை காண முடிந்தது. மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளுக்கும் நேற்று காஞ்சியில் கொளுத்திய வெயிலுக்கு பாதிப்புக்குள்ளாகின. மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளும் நிழல் தரும் இடங்களை தேடி தஞ்சமடைந்தன.
கத்திரி வெயில் மே 4ல் துவங்கினாலும், கோடை மழையால் காஞ்சியில் கடந்த வாரம் வரை குளிர்ச்சி நிலவி வந்த நிலையில், 10 நாட்களுக்கு பின், அக்னி நட்சத்திரத்தின் ஆட்டம் துவங்கியுள்ளதால், கத்திரி வெயில் முடியும் மே 29 வரை எஞ்சியுள்ள நாட்கள் எப்படி இருக்குமோ என, காஞ்சிபுரம் மக்கள் அஞ்சியுள்ளனர்.