புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே, மயிலி அம்மன் கோவில் கிடா வெட்டு பூஜைக்கு வந்த, ஊட்டியைச் சேர்ந்த இரண்டு சிறுமியர், குளத்தில் மூழ்கி பலியாகினர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த விஜயகாந்த், 40, அவரது மனைவி விஜயா, 35. இந்த தம்பதிக்கு அட்ஷயா, 15, தனலட்சுமி, 12, பூமிகா, 10, என, மூன்று மகள்கள் இருந்தனர்.
விஜயகாந்த் குடும்பத்தினரும், அவரது உறவினர் ஆனந்தகுமார், 29, என்பவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, பள்ளத்து விடுதியில் உள்ள குலதெய்வம் கோவிலான மயிலி அம்மன் கோவிலுக்கு நேற்று காலை வந்தனர்.
விஜயகாந்த் மகள்கள் மற்றும் உறவினர் ஆனந்தகுமார் ஆகியோர், கோவிலுக்கு அருகே உள்ள குளத்துக்கு சென்றனர். இதில், ஆனந்தகுமாரும், பூமிகாவும் கரையில் அமர்ந்திருந்தனர்.
குளத்தில் குளித்துக் கொண்டிருந்த அட்ஷயாவும், தனலட்சுமியும் திடீரென நீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்றச் சென்ற ஆனந்தகுமாரும் நீரில் மூழ்கினார். அதிர்ச்சியடைந்த பூமிகா, கோவிலுக்கு சென்று பெற்றோரிடம் விபரம் தெரிவித்தார்.
கோவிலில் இருந்த அனைவரும் குளத்தில் இறங்கி, நீரில் மூழ்கிய மூன்று பேரையும் தேடினர். பல மணி நேர தேடலுக்கு பின், மூவரையும் சடலமாக மீட்டனர்.
கோவில் திருவிழாவுக்கு வந்தவர்களில், மூன்று பேர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம், அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.