கோல்கட்டா, ''காங்கிரஸ் எந்தெந்த மாநிலங்களில் பலமாக உள்ளதோ, அங்கு அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்போம்,'' என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிகள் அமையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த விஷயத்தில் பா.ஜ., காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் மம்தா ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து மம்தா நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போமா என பலரும் கேட்கின்றனர். காங்கிரஸ் எந்தெந்த மாநிலங்களில் பலமாக உள்ளதோ, அங்கெல்லாம் அடுத்த லோக்சபா தேர்தலின் போது, அந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.
அதேபோல், மற்ற பிராந்திய கட்சிகள் எங்கு பலமாக உள்ளனவோ, அங்கெல்லாம் அந்த கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும். தொகுதிகள் ஒதுக்கீடு விஷயத்தில் பிராந்திய கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க காங்கிரஸ் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.