திருப்புவனம்-திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்கறிகள் போதிய அளவு விற்பனையாகாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் சொக்கநாதிருப்பு, அல்லிநகரம், பழையனூர் உள்ளிட்ட கிராமங்களில் கோடை மழையை நம்பி கத்தரி, வெண்டை, அவரை, பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடுகின்றனர். குறைந்த அளவு தண்ணீர் தேவை தினசரி காய்கறி அறுவடையால் விவசாயிகளுக்கு வருவாய் உள்ளிட்ட காரணங்களால் பலரும் காய்கறிகள் பயிரிடுகின்றனர்.
சமீப காலமாக பொதுமக்கள் நாட்டு காய்கறிகள் வாங்குவதை விடுத்து மலைக் காய்கறிகளே அதிகம் பயன்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில்: கத்தரி, வெண்டை, பாகற்காய் உள்ளிட்டவை கிலோ 20 முதல் அதிகபட்சமாக 35 ரூபாய் வரையே விற்பனை செய்யப்படுகின்றன. நாள் முழுவதும் தெருக்களில் சுமந்து சென்றாலும் மார்க்கெட்டில் காத்திருந்தாலும் நாட்டு காய்கறிகள் விற்பனையாவதில்லை. கத்தரி, வெண்டை உள்ளிட்டவற்றை வேகவைத்து வற்றலாக சேமித்து வைத்து ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம், ஆனால் பலரும் மலைக்காய்கறிகளே வாங்குகின்றனர்.
விவசாயிகள் பலரும் கத்தரி, வெண்டை பயிரிடுவதை குறைத்து விட்டனர். இதே நிலை நீடித்தால் காய்கறி பயிரிடுவதை விவசாயிகள் மறந்து விடுவார்கள், என்றனர்.