மதுரை -மதுரை கே.புதுார் பகுதி மாட்டுத்தாவணி ரோட்டில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள், ஐ.டி.ஐ., வேலைவாய்ப்பு அலுவலகம், தபால் அலுவலகம் உள்ளன. அழகர்கோவில் ரோட்டில் இருந்து வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக இத்தொழிற்பேட்டைக்கு செல்லும் ரோடு மோசமாக உள்ளது.
ரோடு முழுவதும் மேடும் பள்ளமுமாக உள்ளது. மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தொழிற்பேட்டை என்பதால் அதிகளவில் சரக்கு வாகனங்கள் செல்ல வேண்டிய இந்த ரோட்டை சரிசெய்ய மாநகராட்சி அக்கறை இல்லாமல் உள்ளது. இரவில் டூவீலர்கள்கூட இதில் செல்ல முடியவில்லை. செல்லும் வாகனங்கள் விபத்தை சந்திக்கின்றன.
சமூக ஆர்வலர் புதுார் சுந்தரராஜ் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில், இந்த ரோட்டை சரிசெய்ய மாநகராட்சியிடம் மனு செய்தேன். அவர்கள், இந்த ரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க வேண்டியிருப்பதால் அப்பணிகள் முடிந்ததும் செப்பனிடப்படும் என்று தெரிவித்தனர். இன்னும் அப்பணிகளை துவக்கவில்லை. பொதுமக்கள் நலன்கருதி உடனே செப்பனிட கலெக்டர் உத்தரவிட வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.