திட்டக்குடி : திட்டக்குடியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, போக்குவரத்து காவல்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி மற்றும் தாலுகா தலைமையிடமாக உள்ளது. இங்கு நெய்வேலி என்.எல்.சி., அரியலுார் மாவட்ட சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் என நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது.
மேலும் திட்டக்குடி அருகிலுள்ள ராமநத்தம் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதன் வழியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிகளவு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டால், போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் தாமதமாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, திட்டக்குடி பகுதியில் போக்குவரத்து காவல்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, போக்குவரத்து காவல்நிலையம் அமைக்க, தொகுதியின் எம்.எல்.ஏ., அமைச்சர் கணேசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.