திண்டுக்கல்-- திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 260 பேர் தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக கலெக்டர் விசாகனிடம் வழங்கி முறையிட்டனர்.
கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் அமர்நாத், ராணி உட்பட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
வத்தலக்குண்டு பஸ்ஸ்டாண்ட் பின்புறமுள்ள காந்திநகர் பிரதான சாலையில் அடுத்தடுத்த டாஸ்மாக் கடைகள், தனியார் பார்களில் 24மணி நேர மதுவிற்பனை, சமூக விரோத செயல்கள் நடப்பதால் குடியிருப்பாளர்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கின்றனர் .
இதை கருதி ஊருக்கு வெளியில் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என கிழக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் லவ்லி ஜவகர் தலைமையில் வழங்கிய மனுவில் குறிப்பிட்டிருந்தது. ஆத்துார் பாறைப்பட்டியை சேர்ந்த சிவகாமி, வன்கொடுமை, சொத்து மோசடி சட்டத்தில் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.
இது போல், நில அபகரிப்பு, பணி, பட்டா, சர்வே அளவிட வேண்டி , மயான இட ஆக்கிரமிப்பு, சிறுதொழில் கடன் என, பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்கள் கொடுக்கப்பட்டது.