பெங்களூரு-ம.ஜ.த.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இருந்தும், சரியானபடி பிரசாரம் செய்து, வாக்காளர்களின் நம்பிக்கையை பெறாமல், எதிர் அணி வேட்பாளர்களுடன், கூட்டணி வைத்து ம.ஜ.த., தோல்விக்கு காரணமானவர்கள் பற்றிய தகவல்களை, அக்கட்சி சேகரிக்கிறது.
சட்டசபை தேர்தலில், கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக, தன்னாய்வு செய்து கொள்ளும் ம.ஜ.த., மேலிடம், தோற்ற வேட்பாளர்களுக்கு தைரியமூட்டுகிறது.
கர்நாடக தேர்தலில், 123 தொகுதிகளை குறி வைத்து சந்தித்த ம.ஜ.த.,வுக்கு கிடைத்தது, வெறும் 19 தொகுதிகள் மட்டுமே.
தேர்தல் முடிவு வெளியானதும், முன்னாள் முதல்வர் குமாரசாமி, வெற்றி பெற்ற வேட்பாளர்களை தொடர்பு கொண்டு வாழ்த்தினார். தோற்றவர்களுக்கு தைரியமூட்டினார்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், தோற்ற வேட்பாளர்களை நேற்று மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல்கூறி, தைரியமூட்டினார்.
'தற்போது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து, யாரும் மனம் தளர வேண்டாம். கட்சியை பலப்படுத்துவதில், கவனம் செலுத்தலாம்,' என கூறி தன்னம்பிக்கை ஏற்படுத்தினார்.
கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இருந்தும், சரியானபடி பிரசாரம் செய்து, வாக்காளர்களின் நம்பிக்கையை பெறவில்லை.
மாறாக எதிரணி வேட்பாளர்களுடன், கூட்டணி வைத்து ம.ஜ.த., தோல்விக்கு காரணமானவர்கள் பற்றிய தகவல்களை, மேலிடம் சேகரிக்கிறது. கட்சியிடம் 'சீட்' பெற்று, துரோகம் செய்தவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ம.ஜ.த., முடிவு செய்துள்ளது. இத்தகையவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.