பெங்களூரு-முதல்வர் பதவிக்கு தேர்வு செய்வது குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ரகசிய ஓட்டெடுப்பு நடந்தது. ஆனால் மூத்த தலைவர் ராஜண்ணா, சித்தராமையாவுக்கு ஓட்டு போட்டதாக பகிரங்கமாக தெரிவித்தார்.
முதல்வர் பதவிக்கு, சித்தராமையா, சிவகுமார் இடையே இழுபறி நடக்கிறது. முதல்வர் யார் என்பதை, எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்ய வேண்டும்.
சிலர் சித்தராமையாவுக்கு ஆதரவாகவும், சிலர் சிவகுமாருக்கு ஆதரவாகவும் நிற்கின்றனர். இருவரில் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள, நேற்று முன் தினம் இரவு ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
பெங்களூரின், தனியார் ஹோட்டலில் நேற்று நள்ளிரவு துவங்கிய ஓட்டெடுப்பு, அதிகாலை 1:30 வரை நடந்தது.
இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்றனர். எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு பதிவு செய்துவிட்டு, மவுனமாகினர். ஆனால் மதுகிரியில் வெற்றி பெற்ற ராஜண்ணா மட்டும், சித்தராமையாவுக்கு ஆதரவளித்ததாக கூறினார்.
இதுகுறித்து ராஜண்ணா கூறியதாவது:
நானும் முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறியிருந்தேன். ஆனால் யார், யாருக்கு ஓட்டு போட்டனர் என்பது தெரியவில்லை.
ஆனால் நான் சித்தராமையாவுக்கு ஓட்டு போட்டேன். அதிகமாக எம்.எல்.ஏ.,க்களும், இவரையே ஆதரித்திருக்க வாய்ப்புள்ளது.
கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, நேற்று முன்தினம் நள்ளிரவு கூட்டம் நடத்தினார்.
இவ்வாறு அவர் கூறினார்.