வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கிண்டி பல்நோக்கு மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நியமனம் இன்னும் துவங்கவில்லை. இதனால், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டிக்கு இடம் மாற்றப்படுகிறதா என, மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டப்பட்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி மாற்றத்திற்குப் பின், இந்த கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
மருத்துவமனை கட்டமைப்புக்காக, 140 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு, தற்போது இதயம், நரம்பியல், புற்றுநோய் உள்ளிட்ட, 14க்கும் மேற்பட்ட உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளுடன், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மாநிலம் முழுதும் இருந்து, தினசரி 500க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து, சிகிச்சை பெறுகின்றனர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், இந்த மருத்துவமனை கட்டடம், தலைமைச் செயலகமாக மாற்றப்படுமா என்ற சந்தேகம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 4.89 ஏக்கரில், 230 கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனையை அரசு கட்டி முடித்துள்ளது.
தற்போது, 143 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பொருத்தும் பணிகள் நடக்கின்றன. இந்த புதிய மருத்துவமனை, ஜூன் 5ம் தேதி திறக்கப்பட உள்ளது.
திறப்பு விழாவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமனம் இதுவரை நடைபெறவில்லை.
எனவே, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்பு, கிண்டி பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரசு மருத்துவர்கள் சிலர் கூறியதாவது:
கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவின் போது, நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலையில் இருக்க வேண்டும் என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை இன்னும் தேர்வு செய்யவில்லை.
ஏற்கனவே, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை உள்ளது. இதனால், மற்ற அரசு மருத்துவமனைகளில் இருந்து, கிண்டி பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றும் வாய்ப்பு குறைவு.
அதற்கு பதிலாக, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவ கட்டமைப்பை, அப்படியே கிண்டிக்கு மாற்றுவர் எனத் தெரிகிறது. இதுகுறித்து, அரசு தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியிடாமல் உள்ளனர். இந்த விவகாரத்தில், அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்ற குழப்பம், மருத்துவர்களிடையே நீடிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அழைத்து வர ஆம்புலன்ஸ்
கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை, ஜூன் 5ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநாளில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.திடீரென மருத்துவமனை திறப்பதால், நோயாளிகள் பெருமளவு வரமாட்டார்கள். அதனால், சென்னை ஓமந்துாரார், அரசு ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, ஆம்புலன்ஸ் வாகனங்களில் கிண்டி மருத்துவமனைக்கு ஜூன் 1 முதல் அழைத்து வர, திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக, புதிய மருத்துவமனை அமைக்கும் பணிகளை நிறைவு செய்து, மே 28ம் தேதி, மக்கள் நல்வாழ்வு துறையிடம் ஒப்படைக்கும்படி, பொதுப்பணித் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
செயலகமாக மாற்றம்?
ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டட பராமரிப்புக்கு, ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் வரை செலவாகிறது. ஒரு மருத்துவமனைக்கு இவ்வளவு தொகையை, அரசு தருவதில்லை. அதனால், பெரிய அளவில் பராமரிப்பின்றி, 'சீலிங்' இடிந்து, கறை படிந்து, கழிப்பறைகள் சேதமடைந்த நிலையில் தான் உள்ளன.ஒருவேளை மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட்டால், இந்த கட்டடத்தை புனரமைத்து சட்டசபை வளாகத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்ள, ஓராண்டுக்கு மேலாகும். எனவே, தலைமைச் செயலகமாக மாற்ற நினைத்தால், 2024 இறுதியில் தான் மாற்ற வாய்ப்புள்ளது.
- சுகாதாரத் துறை அதிகாரிகள்