கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வந்த கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று அன்னை தெரசா பல்கலையில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்றார். பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.
கவர்னர் மனைவி லட்சுமியுடன் நேற்று முன்தினம் (மே 14) கொடைக்கானல் வந்தார். இரவு கோஹினுார் பங்களாவில் தங்கிய அவர், நேற்று காலை 8:15 மணிக்கு ரோஸ் கார்டனில் பேட்டரி கார் மூலம் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பணியாளர்களிடம் கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆய்வு முடிவில் அங்கிருந்த வருகை பதிவேட்டில் 'ரோஸ் கார்டனை நல்ல முறையில் பராமரித்து வரும் பணியாளர்களை பாராட்டுகிறேன்' என எழுதி கையெழுத்திட்டார். வான் ஆராய்ச்சி நிலையத்தை (அப்சர்வேட்டரி) ஆய்வு செய்தார்.
பின் காலை 11:30 மணிக்கு அட்டுவம்பட்டி அன்னை தெரசா பல்கலைக்கு வந்தார். துணைவேந்தர் கலா, பதிவாளர் ஷீலா பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றனர். அங்கிருந்த பழங்குடியினர் பாரம்பரிய உடையணிந்து நடனம் ஆடி கவர்னரை வரவேற்றனர். பல்கலை வளாகத்தில் பழங்குடியினர் வாழும் குடில் போன்ற அமைக்கப்பட்ட இடத்தின் உள்ளே சென்று அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அன்னை தெரசா சிலைக்கும் மாலை அணிவித்து மாணவிகள் அமைத்த கண்காட்சியை பார்வையிட்டார். இயற்பியல் ஆய்வகத்தில் புதிதாக வாங்கப்பட்ட கூட்டு நுண்ணோக்கி இயந்திரத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி படத்திற்கு அவர் மாலை அணிவித்தார். பின் ஆடிட்டோரியத்தில் கல்லுாரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
மாலை பிரையன்ட் பூங்கா, துாண்பாறை, கோக்கர்ஸ்வாக், மேயர் சதுக்கம், பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றலா பகுதிகளை கவர்னர் பார்வையிட்டார். இரவு கோஹினுார் பங்களாவில் தங்கிய அவர் இன்று அங்கிருந்து காரில் மதுரை வழியாக சென்னை செல்கிறார்.