சென்னை : அரசு கவின் கலை கல்லுாரிகளில், விண்ணப்ப வினியோகம் துவங்கி உள்ளது.
இதுகுறித்து, கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலை கல்லுாரிகளில், 'விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன்' எனும் காட்சித் தொடர்பு வடிவமைப்பு, ஓவியம், சிற்பம் ஆகிய படிப்புகள் உள்ளன.
இவற்றில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உள்ளன. 'இண்டஸ்ட்ரியல் டிசைன் செராமிக்' எனும் ஆலையக சுடுமண் வடிவமைப்பு, 'இண்டஸ்ட்ரியல் டிசைன் இன் டெக்ஸ்டைல்' எனும் துகிலியியல் வடிவமைப்பு, 'பிரின்ட் மேக்கிங்' எனும் பதிப்போவியம் ஆகிய படிப்புகள், சென்னை கல்லுாரியில் மட்டுமே உள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை, www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாயை, கல்லுாரி வங்கி கணக்கில் செலுத்தி, உரிய சான்றுகளுடன், அடுத்த மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, கும்பகோணம் கவின் கலை கல்லுாரியை, 0435 - 248 1371 என்ற தொலைபேசி எண்ணிலும், சென்னை கவின் கலை கல்லுாரியை, 044 - 2561 0878 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.