கொடைக்கானல், : ''அம்மாவையும், சுவாமி விவேகானந்தரையும் முன்னுதாரணமாக கொண்டு முன்னேறினேன்,'' என, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையில் நடந்த கலந்தாய்வில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
கவர்னர் பேசியதாவது: மாணவிகள் உயர்ந்த லட்சியத்துடன் ஆராய்ச்சிப்படிப்பை மேற்கொள்ள வேண்டும். விடாமுயற்சியும், அதற்கான நேர்மறை சிந்தனைகளுடனும் வாழ்வில் முன்னேற வேண்டும். காலத்தை விரையம் செய்யக்கூடாது. காலம் சென்றால் திரும்ப வராது.
ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது நோபல் பரிசு பெற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் படிக்க வேண்டும். ஏதோ படித்தோம், உயர் கல்வி முடித்தோம், வேலை வாங்கினோம் என இருக்காமல் தனித்துவம் வாய்ந்தவர்களாக உலகில் திகழ வேண்டும்.
என் முன்னேற்றத்திற்காக அம்மாவையும், சுவாமி விவேகானந்தரையும் முன் உதாரணமாக கொண்டேன். ஒருவர் மட்டுமல்ல பலரை முன்னுதாரணமாக கொண்டு திகழ வேண்டும். உலகம் வெப்பமயமாதலை தடுக்க மாணவிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்திய கலாசாரத்தை உலகளவில் புகழ் பெற செய்வது மாணவர்களின் கடமை.
பேராசிரியர்கள் நல்ல தரமான நுால்களை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும். பெண்கள் குடும்பத்திலும், பணிகளிலும் திறம்பட செயல்படுகிறார்கள். பணிகள் மட்டும் செய்யாமல் தங்கள் உடல் நலத்தை பேணுவதிலும் அக்கறை செலுத்த வேண்டும், என்றார்.