மதுரை : வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரின் பாணியில், பதவி உயர்வு அலுவலர்கள் சங்கத்தினரும் சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் போராடுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழக அரசின் வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் வரு வாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் காத்திருப்பு பேராட்டம் நடத்தினர். அவர்களிடம் துறையின் உயரதிகாரிகள் மட்டுமின்றி, தலைமை செயலாளர் இறையன்பும் பேசினார்.
தொடர்ந்து அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனே போராட்ட களத்திற்கு வந்து உறுதிகூறி முடித்து வைத்தார். தற்போது இத்துறையின் பதவிஉயர்வு அலுவலர்களும் இந்த முறையில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இரண்டுஆண்டு தகுதி காண் பருவம் முடித்த இளநிலை வருவாய் ஆய்வாளர்கள், தட்டச்சர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்படும்.
ஆனால் அரசாணை 78/2015 ன்படி ஆறாண்டு பணிமுடித்த வி.ஏ.ஓ.,க்களுக்கும் அதேபணிக்கு பதவி உயர்வு 30 சதவீதம் வழங்குகின்றனர். இதில் பதவிஉயர்வுக்காக 12 ஆண்டுகள் வி.ஏ.ஓ.,க்கள் காத்திருக்கின்றனர்.
அவ்வாறு பதவி உயர்வு பெறுவோரை, இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர்களுக்கும் கீழான வரிசையில் வைத்துள்ளனர். இது அரசின் சட்டவிதிகளுக்கு முரணானது எனக்கூறி வி.ஏ.ஓ.,க்கள் பதவிஉயர்வு பெற மறுக்கின்றனர். இந்நிலைக்கு வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் சிலர் உடந்தையாக உள்ளதாக பதவி உயர்வு அலுவலர் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக முறையிட்டும், வழக்கு தொடர்ந்தும் வருகின்றனர். இதில் சுணக்கம் ஏற்படுவதால், வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கத்தினர், அரசுப் பணியாளர் சங்கத்துடன் இணைந்து போராட்ட முடிவை கையில் எடுத்துள்ளனர்.
பதவி உயர்வு அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறுகையில், 2015 அரசாணையில் திருத்தம் செய்ய வலியுறுத்தி மே 26 ல் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பெருந்திரளாக முற்றுகையிட உள்ளோம்.
முடிவு கிடைக்காவிடில் ஜூன் 5ல் கருப்பு பேட்ஜ் அணிந்தும், ஜூன் 12 ல் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்தும் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.