உசிலம்பட்டி : 'பல தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து தமிழகத்தில் பாலாறு, தேனாறு ஓடும் என்றார்கள். ஆனால், கள்ளச்சாராய ஆறுதான் ஓடுகிறது' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
மதுரைமாவட்டம் உசிலம்பட்டி நகர் அ.தி.மு.க., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம், மடிக்கணினி, கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம், முதியோர்களுக்கான உதவித்தொகை என நலத்திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் கடலில் பேனா வைக்க ரூ.80 கோடிக்கு திட்டம் போடுகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கள்ளச்சாராயம் என்ற பேச்சே இல்லாமல் தடுத்து வைத்திருந்தோம். ஆனால் இன்று பாலாறு தேனாறு ஓடும் என்றார்கள். கள்ளச்சாராயம் தான் ஆறாக ஓடுகிறது. கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்ற விஷச்சாராயம் குடித்து 10 பேர் இறந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீட்டில் இருந்து வெளியே செல்லும் உழைப்பாளர்கள் உயிரோடு திரும்பி வருவார்களா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு லட்சம் கோடிக்கு மேலே ஆயத்தீர்வை கட்டாமல் கள்ள மார்க்கெட்டிலே டாஸ்மாக்கில் விற்பனை செய்வதாகவும், அதனால் மதுவின் தரம் என்னவென்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலும் தெரிவிக்கப்படுகிறது. அனுமதிக்கப்படாத பார்கள் மூலமாக விற்கப்படுகின்ற கள்ளச்சாராயம் மூலமாக உயிர்ப்பலி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,என்றார்.