சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் உடல் சிதறி பலியானதையடுத்து, மறுஉத்தரவு வரும் வரை கல்குவாரியை இயக்க தடை விதித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சேந்தமங்கலம் அடுத்த சாலையூர் பகுதியில், தண்டிகரடு அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள கல்குவாரியை வரதராஜ் என்பவர், 2021 முதல் 2028ம் ஆண்டு வரை, பாறையில் கல் உடைத்து, ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உற்பத்தி செய்ய, கனிமவள துறையில் அனுமதி பெற்றுள்ளார். இந்த கல்குவாரியை திருப்பதிசாமி என்பவர், துணை ஒப்பந்தம் பெற்று கல்குவாரியில் பாறைகளை உடைத்து ஜல்லிகளை உற்பத்தி செய்து வந்தார்.
கடந்த, 12ல், சில வெடிகள் வெடிக்காமல் இருந்ததை கண்டறிந்த கந்தசாமி, காலையில் அதனை பரிசோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக வெடி வெடித்துள்ளது.
இந்த வெடிவிபத்தில் சிக்கிய கந்தசாமி, 300 அடி உயரத்திலிருந்து துாக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயங்களுடன், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார் விசாரணை நடத்தி, அறிக்கை அளித்துள்ளார். அதில், கல்குவாரியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல், பாறைக்கு வெடி வைத்தது தெரியவந்துள்ளது. இதனால்,
கல்குவாரியின் உரிமத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்து உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் கல்குவாரி உரிமையாளர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.