கோபி: பள்ளி கோடை விடுமுறை என்பதால், கோபி கிளை நுாலகத்தில் உள்ள மெய்நிகர் நுாலகத்துக்கு வரும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், நுாலகத்தை நாடும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டி, கோபி, வடக்கு பார்க் வீதியில் இயங்கும் கிளை நுாலகத்தில், மெய்நிகர் நுாலகம் (விர்ச்சிவெல் ரியாலிட்டி லைப்ரரி), 2022 நவம்பரில் துவங்கப்பட்டது. அதாவது இல்லாத ஒரு விஷயத்தை, இருப்பது போல் உணர, கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை, '3டி' ஒளியில் காண கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, இரு கருவி கோபி கிளை நுாலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
'ஜாய் ஸ்டிக்' கருவி, விரல் நுனி மூலம், அந்த கருவியை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கருவியில், இயற்கை காட்சிகள், ஜூராசிக் பார்க், நேஷனல் ஜியோகிரபி, புளூ பிளேனட் உள்ளிட்ட அதிசயங்களை காணமுடியும். இந்த விபரங்களை கண்டு கழிக்க, கோபி கிளை நுாலகத்துக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது கோடை விடுமுறை என்பதால், மெய்நிகர் நுாலகத்தை காண வரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, நுாலகத்துறையினர் தெரிவித்தனர்.