கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த, நரிமேட்டை சேர்ந்த மாதப்பன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர், நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் அனைவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தாபுரம் பஞ்.,க்கு உட்பட்ட நரிமேட்டில் வசிக்கிறோம். இதில், 33 பேர் இப்பகுதியில் வீடு கட்டியும், 12 பேர், 2.60 ஏக்கரில் விவசாயம் செய்தும் வருகிறோம். எங்கள் நிலங்களுக்கான பத்திரங்கள் எங்கள் பெயரில் உள்ளது. சிட்டா அடங்கலில் எங்கள் பெயர்கள் உள்ளன. எங்கள் கூட்டு பட்டாவை, அரியம்மாள் என்பவர் பெயருக்கு தவறாக பதிவு செய்துள்ளனர். அவருக்கு, தற்போது எந்த நிலமும் அனுபவத்தில் இல்லை.
இந்நிலையில், பட்டா பெயரை மட்டும் பயன்படுத்தி, அவர்கள் அனுபவத்தில் இல்லாத நிலங்களை மற்றவர்களுக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து, விவசாயிகள் குறைதீர்க்கும் முகாமிலும் மனு அளித்துள்ளோம். ஒரு சென்ட் கூட அனுபவத்தில் இல்லாத நிலையில், பட்டாவில் உள்ள பெயரை போலி பத்திரப்பதிவு செய்து, உரிமையாளர்களை ஏமாற்றும் நோக்கில் செயல்படுகிறார்கள். இது குறித்து விசாரித்து, 45 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்டவரின் பெயரை, பட்டா வருவாய் ஆவணங்களிலிருந்து நீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.