காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக கட்டடம் கட்டி நுாறு ஆண்டுகள் கடந்து விட்டது. வாகனங்கள் நிறுத்துவதற்கான போதுமான வசதியும் இல்லை.
மாநகராட்சி அலுவலகத்துக்கு வேறு இட வசதி இல்லாததால், அதே இடத்தில் பழைய கட்டடத்தை முழுமையாக இடித்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. புது கட்டடம் கட்டுவதற்கு அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
புதிய கட்டடம் கட்டி முடிக்கும் வரை, மாநகராட்சி அலுவலகம் காஞ்சிபுரம், ஆஸ்பிட்டல் சாலையில் உள்ள யாத்திரி நிவாஸ் கட்டடத்திற்கு இடம் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தில் வாடகையில் செயல்பட்டு வந்த தனியார் உணவகம் காலி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலக பொருட்களை யாத்திரி நிவாஸ் கட்டடத்துக்கு மாற்றுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மொத்தமாக அலுவலகத்தை காலி செய்ய முடியாது. இங்குள்ள பொருட்களை ஒவ்வொரு பிரிவு வாரியாக எடுத்துச் சென்று, அங்கு அறைகள் அமைக்க வேண்டும். மேலும் அந்த கட்டடத்தில் கூடுதலாக இரு அறைகள் கட்டப்பட இருக்கிறது.
மாநகராட்சி மன்ற கூட்டம், அண்ணா அரங்கில் மேல் தளத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதம் மன்ற கூட்டம் முடிந்த பின், அந்த அறையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும்.
இப்படி படிப்படியாக வேலை நடந்து வருவதால் தாமதம் ஏற்படுகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் முழுமையாக மாற்றப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.