கடலாடி : கடலாடி அரசு கலை அறிவியல் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் விளையாட திறமை இருந்தும் பயிற்சிக்கு இடமின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.
கடலாடி அருகே சமத்துவபுரம் பகுதியில் கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ரூ.5 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டத்தில் 2017 முதல் செயல்படுகிறது. கடலாடி, சாயல்குடி, சிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.
கல்லுாரி மைதானம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பாலும், புதர் மண்டியும் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது.
முன்னாள் கல்லுாரி மாணவர்கள் கூறியதாவது:
கல்லுாரியில் விளையாட்டுத்திறன் மிக்க மாணவர்கள் உள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கல்லுாரியில் மைதானம் இருந்தும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர் மண்டியுள்ளது. கல்லுாரி படிப்பையும் தாண்டி, விளையாட்டில் சாதிக்கும் ஆர்வம் கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு இதனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ்,இறகுப்பந்து, கிரிக்கெட், தடகளம் விளையாடுவதற்கு மைதான இடவசதிகள் இருந்தும், பயன்பாடின்றி உள்ளது.
ராணுவம், போலீஸ் பணிகளுக்கு உடற்தகுதி விளையாட்டுகளே பிரதானமாக உள்ள நிலையில், கல்லுாரி மாணவர்களின் எதிர்காலம் கருதி, மைதானத்தை சீரமைக்கவும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும், என்றனர்.