பல்லாரி: சட்டசபை தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு தோற்றதால், அவரது தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.
இவர்களுக்கு ஸ்ரீராமுலு ஆறுதல் கூறி வருகிறார்.
கடந்த 1999ல் அரசியலுக்கு வந்த ஸ்ரீராமுலு, முதல் தேர்தலில் தோற்றார். 2004 முதல் 2018 வரை தோற்றதில்லை.
2004ல் பல்லாரி நகர், 2008, 2011 இடைத்தேர்தல், 2013 தேர்தலில் பல்லாரி ரூரல் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
கடந்த 2014ல் தொகுதியை விட்டு கொடுத்து, எம்.பி.,யானார். 2018ல் சித்ரதுர்காவின், மொலகால்மூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை தோல்வியடைந்தார். இதனால் தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
பல்லாரி ரூரல் பகுதியின், ஒவ்வொரு கிராமத்திலும் இவரது ஆதரவாளர்கள் துயரத்தில் உள்ளனர். தோல்விக்காண காரணத்தை அறியும் நோக்கில், ஸ்ரீராமுலு ஆய்வு செய்கிறார்.
அந்தந்த கிராமங்களுக்கு செல்லும் போது, தங்கள் தலைவனின் தோல்வியை நினைத்து கண்ணீர் வடிக்கின்றனர்.
தொண்டர்களின் அன்பை நினைத்து, ஸ்ரீராமுலுவும் கண்ணீர் வடிக்கிறார். தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி, தேற்றி வருகிறார்.