சென்னை:''தமிழ்நாடு ஹோட்டல்களில் தொடர்ச்சியாக தங்குவோருக்கு சலுகை வழங்கி, ஊக்கப்படுத்த வேண்டும்,'' என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை, வாலாஜா சாலையில் உள்ள தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமையகத்தில், துறை மேலாளர்கள், மண்டல மேலாளர்களுடன், சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பின், தற்போது தான் சுற்றுலா துறை வளர்ச்சி அடைகிறது. அதை மேலும் மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு விடுதிகளில் உணவு வகைகளையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டும்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் தங்குவோருக்கும், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகைகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள படகு இல்லங்களின் சுற்றுப்புறத் துாய்மையை காப்பதுடன், படகுகளை அழகாகவும், பழுதின்றியும் பராமரித்து, சுற்றுலா பயணியரை கவர வேண்டும்.
சுற்றுலா பஸ்களில் கோடை வாசஸ்தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் பயணத்திட்டங்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.