உடுமலை;உடுமலையில், தனியார் பள்ளி வாகனங்களுக்கு தரச்சான்று வழங்க மேற்கொண்ட ஆய்வில், 32 வாகனங்களை இயக்க தற்காலிகமாக தடை விதித்து, உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, மாணவர்களை அழைத்துச்செல்லும், பள்ளி வாகனங்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் முறையாக இருக்க உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் குழு வாயிலாக ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்படுகிறது.
அவ்வகையில், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு நேற்று நேதாஜி மைதானத்தில் நடந்தது.
வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த்கண்ணன், ஆர்.டி.ஓ., செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணா, போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
உடுமலை வட்டாரத்தில், மொத்தம், 266 தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், முதற்கட்டமாக, நேற்று, 156 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
ஆய்வின் போது, 32 தனியார் பள்ளி வாகனங்கள், கண்காணிப்பு கேமரா பொருத்தாதது, வேகக்கட்டுப்பாடு கருவி, படிக்கட்டுகளின் உறுதித்தன்மை, முதலுதவி பெட்டி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவ்வாகனங்களை இயக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளின்படி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, மீண்டும் அவ்வாகனங்களை தணிக்கைக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டது.
மீதமுள்ள வாகனங்களும் முறையாக தணிக்கை செய்யப்பட்டு, தரச்சான்று வழங்கப்படும் என அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.