மங்களூரு: தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரமாநாத் ராய் அறிவித்து உள்ளார்.
கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் ரமாநாத் ராய், 70. தட்சிண கன்னடா மாவட்டம், பண்ட்வால் தொகுதியில், ஆறு முறை வெற்றி பெற்றார். பல முறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2018 தேர்தலிலும், நடந்து முடிந்த தேர்தலிலும், தோல்வி அடைந்தார்.
தேர்தலுக்கு முன், 'இதுதான் என் கடைசி தேர்தல்' என, உருக்கமாக பேசி பிரசாரம் செய்தார். ஆனாலும் அவர் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தேர்தல் அரசியலில் இருந்து, ஓய்வு பெற உள்ளேன். தொடர்ந்து இருமுறை தோல்வி, அடைந்து விட்டேன். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டி உள்ளது. தீவிர அரசியலில் இருந்து, விலக மாட்டேன். கட்சி எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும், உறுதுணையாக இருப்பேன்.
மாநில மக்கள், காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து உள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டத்தில், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அதை சரிசெய்து லோக்சபா தேர்தலில், தட்சிண கன்னடா தொகுதியில் வெல்வோம். காங்கிரஸ் அளித்துள்ள, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.