சென்னை:'சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில், தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு, 25 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கம் சார்பில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
தலைமைச் செயலகப் பணியாளர்கள், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை, தலைமைச் செயலகத்திலேயே பணியாற்ற வேண்டி உள்ளது.
சென்னையில் தலைமைச் செயலகத்தை ஒட்டி, 15 கி.மீ., சுற்றளவில், தனியார் வீடுகளில், அவர்கள் நிர்ணயிக்கும் வாடகையில் வசிப்பது இயலாதது. பெரும்பாலானோர், சென்னை புறநகர் பகுதிகளில், 40 கி.மீ.,க்கு அப்பால் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால், பணிக்கு உரிய நேரத்தில் வருவதும், அலுவலக பணி முடிந்து வீட்டுக்கு செல்வதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
ஊதியத்துடன் வழங்கப்படும், வீட்டு வாடகைப் படியை வைத்து, தனியார் வீட்டு வாடகையை சமாளிப்பதும் இயலாமல் உள்ளது. தற்போது சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால், புதிதாக கட்டப்பட்டுள்ள வாடகை குடியிருப்புகளில், 25 சதவீத வீடுகளை, தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு, சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அரசுப் பணியாளர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ஏராளமானோர் காத்திருக்கின்றனர். எனவே, பொது ஒதுக்கீடுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.