அம்பத்துார், அம்பத்துார், வெங்கடேஸ்வரா நகர், மாசிலாமணி தெருவைச் சேர்ந்தவர் லதா, 51. இவரது கணவர் ராஜகோபால், 2019ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர்களது இளைய மகன் சாய்சக்தி, 16; 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்டவர்.
லதா, குடும்ப தேவைக்காக, கந்தகோட்டம் நகர், அபிராமி தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரியிடம், 35 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். இதற்கு, 10 சதவீதம் வட்டி செலுத்தி வந்திருக்கிறார். வட்டி தொகை போக, மேலும், 55.50 லட்சம் ரூபாய் அசல் தொகை செலுத்த வேண்டும் என, புவனேஸ்வரி கூறியிருக்கிறார்.
இது தவிர, லதா அடமானம் வைத்திருந்த, 30 சவரன் நகைகளை, 8.40 லட்சம் ரூபாய்க்கு மீட்டு, தனக்கு சேர வேண்டிய தொகைக்காக, அவற்றையும் புவனேஸ்வரி விற்பனை செய்திருக்கிறார்.
மேலும், லதாவை மிரட்டி, அவருக்கு சொந்தமான, 2,400 சதுர அடி இடத்தில், 1,200 சதுர அடி இடத்தை தன் பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட லதா, ஆவடி கமிஷனரிடம் புகார் செய்தார். விசாரணையில், புவனேஸ்வரியின் ஆடாவடி உறுதியானது.
இதற்கு உடந்தையாக இருந்த புவனேஸ்வரியின் கணவர் பாஸ்கர், 46, மற்றும் சீனிவாசன், 53, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, முக்கிய குற்றவாளிகளான புவனேஸ்வரி, ராஜமாதா, துர்கா ஆகியோரை, தேடி வருகின்றனர்.