சென்னை, 'ஆவடி, விளிஞ்சியம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள், நான்கு வாரங்களில் முடிக்கப்படும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், ஆவடி தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஆவடி விளியஞ்சியம்பாக்கம் ஏரி, 100 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. ஆக்கிரமிப்புகளால் பாதிக்கும் மேல் காணாமல் போனது தொடர்பாக, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து தென் மண்டல பசுமை விசாரித்தது. 'விளிஞ்சியம்பாக்கம் ஏரி உட்பட ஆவடி மாநகராட்சி எல்லைக்குள் உள்ள ஏரிகளின் எல்லையை வரையறுக்க சிறப்பு ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம் 2007-ன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நான்கு வாரங்களுக்குள் முடிக்கப்படும்' என, ஆவடி தாசில்தார் அறிக்கை அளித்துள்ளார்.
'புழல் ஏரி மற்றும் அம்பத்துார் ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.
விளிஞ்சியம் பாக்கம் ஏரியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பணியை முடிக்க ஒரு மாதம் அவகாசம் தேவை' என, ஆவடி மாநகராட்சி அறிக்கை அளித்துள்ளது.
இவ்வழக்கில் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
ஆவடி மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் உள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிகளை சீரமைக்க வேண்டும். ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பு இல்லாததால், ஏரிகளில் கழிவு நீர் விடப்பட்டு மாசடைந்து வருகிறது.
ஏரிகள் மாசடைவதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆவடி மாநகராட்சியுடன் இணைந்து திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 7-ம் தேதி நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.