தஞ்சாவூர்:''இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்துள்ளனர்,'' என, ஒரத்தநாட்டில் நடந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், மாற்றுக் கட்சியினர் அ.திமு.க.,வில் இணையும் விழா நடந்தது.
இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது;
அ.தி.மு.க.,வில் துரோகிகளுக்கு இடமில்லை. ஜெயலலிதா, எனக்குப் பின்னால் இந்த இயக்கம் நுாறு ஆண்டுகள் இருக்கும், எனக் கூறினார். எந்த அ.தி.மு.க., தொண்டனும் பன்னீர் செல்வத்தை மன்னிக்க மாட்டான்.
யாரோடு சேரக்கூடாது என எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நினைத் தார்களோ, எதை தீயசக்தி என கூறினார்களோ, ஜெயலலிதாவின் உயிர் போக காரணமாக யார் இருந்தார்களோ, அவர்களை தேடிச் சென்று தி.மு.க.,வுக்கு பினாமியாக, 'பி' டீமாக பன்னீர்செல்வம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.,வில் இருந்து 10 ஆண்டுகள் நீக்கப்பட்டவர் தினகரன். இப்போது, இரண்டு துரோகிகளும் ஒன்றாக இணைந்துள்ளனர்.
தி.மு.க., நிதியமைச்சராக இருந்தவர் 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஆடியோவில் கூறினார். அந்த 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து, அமித்ஷாவிடம் கூறிய போது, அவரும் ஆதாரங்களை திரட்டிக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். விரைவில் கவர்னரை சந்தித்து, இதுகுறித்து மனு அளிக்க உள்ளோம். 30 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரத்தை அ.தி.மு.க., சும்மா விடாது.
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி டெல்டாவில், தி.மு.க., ஆட்சிக் காலத்தில்தான், மீத்தேன், ஈத்தேன் எடுக்க அனுமதி வழங்கி, விவசாய நிலங்களை பாலைவனமாக்க முயன்றனர். ஆனால், அ.தி.மு.க., அரசு விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மத்திய அரசிடம் வாதாடி, போராடி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தது. தி.மு.க., எப்போதும் விவசாயிகளுக்கு துரோகம்தான் செய்கிறது. இதை இப் பகுதி விவசாயிகள் உணர வேண்டும்.
கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள் ளது. அ.திமு.க., தற்போது புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. வரும் லோக்சபா தேர்தலிலும், தொடர்ந்து சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.