பெலகாவி:''அரசியலமைப்பு சட்டத்தில், துணை முதல்வர் பதவிக்கு என எந்த விதியும் இல்லை. இதை மீறி கர்நாடகாவில் துணை முதல்வர் பதவியை உருவாக்கினால், சட்ட போராட்டம் நடத்துவேன்,'' என, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பீமப்பா கடாட் எச்சரித்து உள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளது. சித்தராமையாவுக்கு முதல்வர், சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால், இதை சிவகுமார் ஏற்க மறுக்கிறார். சில எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள், தங்களது தலைவர்களுக்கு துணை முதல்வர் பதவி கேட்டு நச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெலகாவியைச் சேர்ந்த, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பீமப்பா கடாட், சமூக வலைதளங்களில் நேற்று ஒரு 'வீடியோ' வெளியிட்டார்.
வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 163, 164 பிரிவுகளில், துணை முதல்வர் பதவியை உருவாக்க, எந்த விதியும் இல்லை. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் பெற்று உள்ளேன். கர்நாடகா பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையிடம், துணை முதல்வர் பதவி குறித்து, விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன்.
அரசியல் அமைப்பு சட்டத்தில், துணை முதல்வர் பதவி உருவாக்க விதி இல்லை. ஆனால் முந்தைய அரசுகள் இதை ஒரு மரபாக, மேற்கொண்டு வந்தது என எழுத்துபூர்வமாக அறிக்கை அளித்து உள்ளனர்.
அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தை, காங்கிரஸ் அரசு பின்பற்றுமா. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி, துணை முதல்வர் பதவியை உருவாக்கினால், சட்டப்படி போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.