நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் மாயம்
பொள்ளாச்சி அருகே நெகமத்தைச்சேர்ந்த, 27 வயது பெண், தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், ஆர்.பி., புதுாரைச்சேர்ந்த வாலிபருக்கும் வரும், 24ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இருவீட்டாரும் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அந்த இளம்பெண், வருங்கால கணவரை சந்திக்க வேண்டும் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது தந்தை நானே கொண்டு விடுகிறேன் என கூறினார். அதற்கு, இளம்பெண் நானே செல்கிறேன் எனக்கூறி தம்பியுடன் பொள்ளாச்சிக்கு சென்றார்.
பின்னர் அங்கு இருந்து வருங்கால கணவருடன், சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். பின்னர், வடக்கிப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி திரும்பிய இளம்பெண் மாயமானார்; அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.
இது குறித்து இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வடக்கிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்சோவில் தொழிலாளி கைது
ஆனைமலை அருகே ஒரு கிராமத்தைச்சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ், 23. ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.அந்த சிறுமி சப்தம் போட அந்த வாலிபர் தப்பியோடினார்.
இது குறித்து சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, பெற்றோர், மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போக்சோ வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், சந்தோைஷ கைது செய்தனர்.
வாலிபர் மாயம்: போலீசார் விசாரணை
பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்தவர் மணிகண்டன்,30. இவர், செஞ்சேரி மலைப்பிரிவில் உள்ள தனியார் மில்லில் ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த, 9ம் தேதி வேலை முடித்து வீட்டுக்கு வந்த மணிகண்டன், 13ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றார். அதன்பின்னர், அவரது மொபைல் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது.
மணிகண்டனின் சகோதரர் தம்புராஜ், 32, வேலை செய்யுமிடத்தில் விசாரித்த போது அவர் வேலைக்கு வரவில்லை என தெரிவித்தனர். அவரைத் தேடி கிடைக்கவில்லை. இதையடுத்து, தம்புராஜ் கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போதையில் தகராறு
கொடைக்கானலை சேர்ந்த ஜான் போஸ், 38. இவர், ஆழியாறு ரோடு சுங்கம் அருகே தனியார் பழைய வண்டிகள் உடைக்கும் குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். இரவு நேரங்களில், ஆனைமலை மாசாணியம்மன் நற்பணி மன்றம் முன்பு உள்ள படிக்கட்டுகளில் படுக்க செல்லும் போது, அங்கு துாங்க வரும் கோட்டூரைச்சேர்ந்த மணி என்கிற அமுக்கான் மணியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து நேற்றுமுன்தினம் மது குடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது, மணி, ஜான்போஸிடம் மது வாங்கித்தருமாறு கேட்டார். அதற்கு அவர் பணமில்லை எனக்கூறியதால், மணி, ஹாலோ பிளாக் கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஜான்போஸ் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பீர்பாட்டிலால் தாக்குதல்
பொள்ளாச்சி அருகே சமத்துாரைச்சேர்ந்த விவேக், 30. இவர், ஸ்ரீரங்கத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த, 14ம் தேதி தனது மகளுக்கு பிறந்தநாள் வீட்டுக்கு வந்து இருந்ததாகவும், தனது பழைய முதலாளி சபரி, லாரியில் லோடு ஏற்ற வேண்டும் என அழைத்துச்சென்றதாகவும், வேலை முடித்த பின் தன்னை மணல் மேட்டில் இறக்கி விட்டார்.
நண்பர்களான சசி மற்றும் சுபகிரி ஆகியோருடன் பேசி கொண்டு இருந்தனர். அப்போது, சுபகிரி, 100 ரூபாய் கேட்டதாகவும் தான் இல்லை என விவேக் கூறினார். அப்போது, சுபகிரி, பீர்பாட்டிலால் விவேக்கின் கழுத்தில் அறுத்து விட்டு ஓடிவிட்டார். காயமடைந்த அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கள் விற்றவர் கைது
பொள்ளாச்சி அருகே தேவிப்பட்டணம் தனியார் தோட்டத்தில், 'கள்' விற்பனை செய்யப்படுவதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கள் விற்பனை செய்த காளியாபுரத்தை சேர்ந்த பரமசிவம், 60 என்பவரை கைது செய்து, 22 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் கைது
நெகமம், ஆண்டிபாளையத்தைச்சேர்ந்தவர் சுப்பிரமணி, 43. சக்திவேல், 39. ஆவலப்பம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 51. ஆகிய மூவரும் சட்ட விரோதமாக மஞ்சம்பாளையம் பகுதியில் சேவல் சண்டை நடத்தியுள்ளனர்.
நெகமம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சேவல் சண்டை நடத்திய மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, இரண்டு சேவல் மற்றும் 800 ரூபாய் பணம் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
விஷம் குடித்து வாலிபர் பலி
கிணத்துக்கடவு, கோவிந்தநாயக்கனுாரைச்சேர்ந்தவர் சுஜி,30. இவர் குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சுஜியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.
கள் விற்றவர்கள் கைது
நெகமம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, நெகமம், கொல்லப்பட்டியை சேர்ந்த மாரிமுத்துவிடம், 18 லிட்டர் கள்ளும், கோலிகவுண்டன்பாளையம் கருப்புசாமியிடம், 23 லிட்டரும், கக்கடவு தினேஷ்பிரபுராமிடம், 15 லிட்டரும், மகேந்திரனிடம், 13 லிட்டரும்,
வெள்ளாளபாளையம் ஜெகநாதனிடம், 12 லிட்டரும். செங்குட்டைபாளையம் திருமூர்த்தியிடம், 10 லிட்டரும், சின்னநெகமம் நவநீதகிருஷ்ணனிடம், 10 லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மது விற்றவர்கள் கைது
* பொள்ளாச்சி அருகே, மீனாட்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ஆனைமலை போலீசார் சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜாங்கம், 49 என்றும், அனுமதியின்றி மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
*நெகமம், அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 42. இவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து லோகநாதனை விசாரித்த போலீசார் அவரிடமிருந்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
* கிணத்துக்கடவு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை குறித்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த கணேஷிடம், சிங்கையன்புதூர் பஸ் ஸ்டாப் அருகே 15 மது பாட்டில்களும், கடலூரை சேர்ந்த மணிகண்டனிடம், ஆர்.எஸ்.ரோடு டாஸ்மாக் அருகே 50 மது பாட்டில்களும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தியிடம், 52 மது பாட்டில்களும், மற்றும் சுதாகர், தனியார் திரையரங்கம் அருகே 40 மது பாட்டில்களும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.