பல்லடம்:பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், பளிச்சிடும் மையத் தடுப்புகளை முறையாக பராமரித்தால், நகர பகுதி துாய்மையாக காணப்படும்.
பல்லடம், காரணம்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பல்லடம் - காரணம்பேட்டை வரை உள்ள, 12 கி.மீ., துாரமும் தகுந்த இடைவெளியுடன், மையத் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்லடம் நகரில், தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள மையத்தடுப்புகளுக்கு வெள்ளை பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. மைய தடுப்புகளில் ஓட்டப்படும் வாகன ஓட்டிகளை ஈர்க்கும்படியான போஸ்டர்களால், கவனக்குறைவு ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மையத்தடுப்புகள் பெயிண்ட் அடிக்கப்பட்டு, பளிச் என காணப்படுகிறது. போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களால் நிரம்பி இருந்த மைய தடுப்புகள் நீண்ட நாட்களுக்குப் பின் 'பளிச்' என, துாய்மையாக காணப்படுகிறது. இனி வரும் நாட்களில், போஸ்டர்கள் ஒட்டாமல் மையத் தடுப்புகளை பராமரிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நகரப் பகுதி, துாய்மையாக இருப்பதுடன், விபத்துகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.