தென்காசி:குற்றாலத்தில் தன்னிடம் பணியாற்றும் ஊழியரிடமே 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
தென்காசிமாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருப்பவர் சீனிவாசன் 50.
இவரது அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றுபவர் ராமசுப்பிரமணியன்.
அவருக்கு அலுவலகத்தில் இருந்து 3 லட்சத்து 93 ஆயிரத்து 700 ரூபாய் அரியர் பணம் வர வேண்டியிருந்தது. அதை பெற்று தருவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சீனிவாசன் கேட்டார்.
இது குறித்து ராம சுப்பிரமணியன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மதியழகனிடம் புகார் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் குற்றாலம் குடிநீர் வாரிய அலுவலகத்தில் காத்திருந்தனர். ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாயை ராமசுப்பிரமணியன் கொடுத்தபோது அதை வாங்கிய சீனிவாசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.