ரயில்வே மற்றும் துாத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சுரேஷ்குமாரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
சிவகாசியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மூத்த மகன் கார்த்திக்கிற்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், 2வது மகன் முருகதாசுக்கு ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாக சுரேஷ்குமார், பா.ஜ., மாவட்ட செயலர் கலையரசன் கூறினர்.அதை நம்பிய பாண்டியன், பல தவணைகளாக, 2017ல் 11 லட்சம் ரூபாய் வழங்கினார். ஆனால், வேலை வாங்கித் தராததுடன் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தனர்.
குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். கலையரசனை கடந்தாண்டு டிச., 15ல் கைது செய்த போலீசார் சுரேஷ்குமாரை தேடி வந்தனர். அவரை நேற்று கைது செய்தனர்.
ஊழியரிடமே ரூ.10 ஆயிரம் லஞ்சம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கைது
தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருப்பவர் சீனிவாசன் 50. இவரது அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றுபவர் ராமசுப்பிரமணியன்.

அவருக்கு அலுவலகத்தில் இருந்து 3 லட்சத்து 93 ஆயிரத்து 700 ரூபாய் அரியர் பணம் வர வேண்டியிருந்தது. அதை பெற்று தருவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சீனிவாசன் கேட்டார். இது குறித்து ராம சுப்பிரமணியன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மதியழகனிடம் புகார் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையிலான போலீசார் குற்றாலம் குடிநீர் வாரிய அலுவலகத்தில் காத்திருந்தனர். ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாயை ராமசுப்பிரமணியன் கொடுத்தபோது அதை வாங்கிய சீனிவாசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.
தொழிலதிபர்கள் வீட்டில் பாரம்பரிய பொருட்கள் திருட்டு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் தொழிலதிபர்கள் அழகப்பன், மெய்யம்மை ஆகியோர் குடும்பத்துக்கு பொதுவான லட்சுமி விலாஸ் பூர்வீக வீடு உள்ளது. தொழிலதிபர் குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர். பாரம்பரிய வீட்டில் உள்ள 2 அறைகளில் ரூ.பல லட்சம் மதிப்பில் வெண்கலம், அலுமினியம், மரம், இரும்பு, பித்தளையிலான பாரம்பரிய சீர்வரிசை பொருட்கள் இருந்தன. சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் ரூ.பல லட்சம் மதிப்பிலான பாரம்பரிய பொருட்கள் காணாமல் போயிருந்ததை அறிந்தனர்.
கணக்காளர் மாணிக்கம் 61, புகாரில் பள்ளத்தூர் போலீசார் விசாரித்தனர். வீட்டில் வேலை செய்த கானாடுகாத்தான் பெரியய்யா மகன் சோலையன் 50, ஐந்து ஆண்டுகளாக பாரம்பரிய பொருட்களை ஏஜென்ட் மூலம் சிறுக சிறுக விற்றது தெரிய வந்தது. சோலையனுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி தவமணி 51, மகன் கருப்பையா 28, காரைக்குடி ஏஜென்ட் அய்யாச்சாமி 56, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
சொத்துக்காக மகள் கொலை: முன்னாள் ராணுவ வீரர், மனைவி கைது
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர், 37. இவரது மனைவி சுமதி. இவர்களது மகள் ஹேமஸ்ரீ, 6. கடந்த 2016ல் சுமதி உடல்நலக் குறைவால் இறந்தார். அடுத்த சில மாதங்களில் சந்திரசேகர், திருவண்ணாமலை மாவட்டம், காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ராதிகா, 35, என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளன.
முதல் மனைவியின் மகள் ஹேமஸ்ரீ, திடீரென மயக்கமடைந்ததாக, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கடந்த ஆண்டு நடந்த இந்த வழக்கை, சோளிங்கர் போலீசார் விசாரித்து வந்தனர். உடற்கூறு ஆய்வில், முகத்தை அழுத்தியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஹேமஸ்ரீ பலியானது தெரிந்தது.
அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், சொத்துக்கள், தன் குழந்தைகளுக்கு முழுதும் சேர வேண்டும் என கருதிய ராதிகா, கணவர் சந்திரசேகருடன் சேர்ந்து, சிறுமி ஹேமஸ்ரீயை கொலை செய்தது தெரிந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மரூர் ராஜாவுக்கு, 'குண்டாஸ்'
சாராய வியாபாரி மரூர் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விழுப்புரம் கலெக்டர் பழனி, நேற்று மாலை உத்தரவிட்டார். அதன்படி செயல்பட்ட திண்டிவனம் போலீசார் மரூர் ராஜாவை, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
காரில் சென்று நகை பறிக்க முயற்சித்த இருவர் கைது
கோவை பீளமேடு ஹட்கோ காலனியைச் சேர்ந்த டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் ராஜ்குமார் என்பவர் மனைவி கவுசல்யா, 38. நேற்று முன்தினம் காலை, ஜி.வி.ரெசிடென்சி ரோட்டில், 'வாக்கிங்' சென்றுகொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து, வெள்ளை நிற கார் வந்தது. உரசுவது போல வந்த காரில் இருந்த வாலிபர்களில் ஒருவர், கவுசல்யாவின் செயினை பற்றி இழுத்தார். இதில் தடுமாறி கீழே விழுந்த கவுசல்யா, லேசான காயத்துடன் தப்பினார்; செயினும் தப்பியது.
இதன் 'சி.சி.டி.வி.,' காட்சிகள், வைரலாக பரவியதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. சாலையோர கேமரா காட்சிப்பதிவுகளை, போலீசார் ஆய்வு செய்தனர். இதில், கார் உரிமையாளரான தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல், 29, அவரது நண்பர் திருவண்ணாமலையைச் சேர்ந்த அபிஷேக் குமார், 25, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்; காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறுமிக்கு தொல்லை; 5 பேருக்கு 'குண்டாஸ்'
சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த, 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில், 8ம் வகுப்பு படித்தார். ஏப்., 25ல், பள்ளி முடிந்து வீடு திரும்பியசிறுமியை, ஐந்து பேர் கடத்திச் சென்றுபாலியல் தொல்லை கொடுத்தனர்.
சூரமங்கலம் மகளிர் போலீசார், ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த, 19 முதல் 23 வயது வரையிலான ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சூரமங்கலம் மகளிர் போலீசார் பரிந்துரைத்தனர். அதை ஏற்று, போலீஸ்கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார்.
போதை கணவர் கொலை; மனைவி போலீசில் சரண்
சேலம், ஜாகீர்ரெட்டிப்பட்டி, ஓடை தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 31; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை, 28. தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்த ரமேஷ், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டார். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, போதையில் மனைவியிடம் சண்டையிட்டு, துாங்கினார். மனமுடைந்த மணிமேகலை, அம்மிக்கல்லை கணவர் தலையில் போட்டார். காலையில் அவர் இறந்துவிட்டதை அறிந்த மணிமேகலை, சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
உளவு பார்த்த பத்திரிகையாளர் மீது சி.பி.ஐ., வழக்கு
நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சேகரித்து, அவற்றை வெளிநாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்ததாக, விவேக் ரகுவன்ஷி என்ற பத்திரிகையாளர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.
அரசு டாக்டர் மீது கேரளாவில் மீண்டும் நடந்த தாக்குதல்
கேரளாவில் சமீபத்தில் பெண் டாக்டரை கொலை செய்த சுவடு மறைவதற்குள்ளாக, கொச்சி அரசு மருத்துவமனையில் வேறொரு டாக்டரை கடுமையாக தாக்கிய வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று இரவு கொச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர் இர்பான் பணியில் இருந்தார். அப்போது, வட்டகுன்று பகுதியைச் சேர்ந்த டோயல், 35, என்பவரை விபத்தில் சிக்கியதாக கூறி அவரது உறவினர்கள் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர்.
அவருக்கு, டாக்டர் இர்பான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது டோயல் டாக்டரை தாக்கினார். சக ஊழியர்கள் இர்பானை மீட்டதுடன் உடனடியாக டோயலை அப்புறப்படுத்தினர். பின், போதையில் இருந்த அவரை மருத்துவக்கல்லுாரி போலீசார் கைது செய்தனர். கேரளாவில், அடுத்தடுத்து டாக்டர்கள் தாக்கப்படுவது, அவர்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.