புதுச்சேரி : ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னல்களில் மேம்பாலம் அமைக்க மத்திய சாலை பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி நகர பகுதியை விழுப்புரம், திண்டிவனம், கடலுார், சென்னை சாலைகளுடன் இணைப்பது ராஜிவ் சிக்னல் மற்றும் இந்திரா சிக்னல்.
கடலுார், சென்னை மற்றும் திண்டிவனம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சிக்னல்களில் சிக்காமல் செல்லும் வகையில் இரு சிக்னல்களிலும் மேம்பாலம் அமைக்கப்படும் என கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
ஆனால் அடுத்த வந்த காங்., ஆட்சியில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. என்.ஆர்.காங்., பா.ஜ., ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி பதவியேற்ற பின்பு, இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்களில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது.
இ.சி.ஆரில் லதா ஸ்டீல் ஹவுஸ் அருகில் துவங்கும் மேம்பாலம் ராஜிவ் சிக்னல் மற்றும் இந்திரா சிக்னலை கடந்து நுாறடிச்சாலை மேம்பாலத்துடன் இணைகிறது.
இதில், திண்டிவனம் சாலையும், விழுப்புரம் சாலையும் மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் திட்டம் தயாரித்து, மத்திய சாலைகள் போக்குவரத்து அமைச்சகத்திற்கு (மோர்த்) அனுப்பி வைக்கப்பட்டது.அமைச்சக அதிகாரிகள் புதுச்சேரியில் சமீபத்தில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்தனர். திட்டத்தில் சில மாறுதல்கள் மேற்கொள்ள நடவடிக்கை நடந்து வருகிறது.
இந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு,முதற்கட்டமான கொள்கை ரீதியில் மத்திய சாலை பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.