வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'உயிர்கள் பலியானதற்கு காரணம், கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலைகளில் பயன்படுத்தும், மெத்தனால் எனும் விஷச்சாராயம்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம், எக்கியர்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே, பெருக்கரணை, பேரம்பாக்கத்தில் கைப்பற்றப்பட்ட சாராயம், தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில், இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல; தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் 'மெத்தனால்' எனும் விஷச்சாராயம் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விஷச்சாராயத்தை, ஓதியூரைச் சேர்ந்த வியாபாரி அமரன் விற்பனை செய்துள்ளார். அவரை கைது செய்து விசாரித்தோம். முத்து என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்தார். அவர், புதுச்சேரியைச் சேர்ந்த ஏழுமலையிடம் வாங்கியதாக கூறினார்.

அதேபோல, பெருக்கரணை, பேரம்பாக்கத்தில் விஷச்சாராயம் விற்பனை செய்த, அமாவாசை கைது செய்யப்பட்டார். இவரும் அதை குடித்து சிகிச்சை பெற்று வருகிறார். இவர், விஷச்சாராயத்தை ஓதியூர் வேலு, அவரது சகோதரர் சந்திரனிடம் வாங்கியதாக கூறினார்.
வேலு, பனையூர் ராஜேஷிடம் வாங்கியதாகவும், அவருக்கு விளம்பூர் விஜி என்பவர் விற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. விஜியிடம் விசாரித்தபோது, புதுச்சேரியைச் சேர்ந்த ஏழுமலையிடம் வாங்கியதாக கூறினார். இதிலிருந்து, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட விஷச்சாராயம், ஒரே இடத்தில் தான் வாங்கப்பட்டது என்பது தெரியவருகிறது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், கடத்தலும் பெருமளவில் தடுக்கப்பட்டு உள்ளதால், சாராயம் கிடைக்கவில்லை என்ற நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து, விஷச்சாராயத்தை திருடி விற்றுள்ளனர். அதனால், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
எந்த தொழிற்சாலையில் இருந்து 'மெத்தனால்' வந்தது; அதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.