'மரக்காணம் கள்ளச்சாராய மரணத்திற்கு, வெளியூரில் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் தான் காரணம்' என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மரக்காணம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுதும், கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. தங்கு தடையில்லாமல் எந்த நேரமும் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.

மீனவ கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை, போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இங்கு கள்ளச்சாராயம் குடிப்பதில் பாலின பேதம் சிறிதும் இல்லை. திருட்டுத்தனமாக வடிக்கப்படும் சாராயம், 400 மி.லி., பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது. பிளாஸ்டிக் பாக்கெட்டின் ஓரத்தை கடித்து, துளை உருவாக்கி, அதன் வாயிலாக சாராயத்தை உறிஞ்சி குடிக்கின்றனர். அதனால், இந்த பகுதியில், கள்ளச்சாராயம் 'மூலகடிச்சான்' என, அழைக்கப்படுகிறது.
அதன் விலை, நேரத்துக்கு ஏற்ப மாறும். பொதுவாக, பாக்கெட்டுக்கு 40 ரூபாய் விலை. விற்பனை குறைந்தால், 25 ரூபாயாகக் குறைக்கப்படுகிறது. அதற்கும் விற்பனை ஆகவில்லை என்றால், ஒரு பாக்கெட் வாங்கினால், இன்னொரு பாக்கெட் இலவசம் என்ற தள்ளுபடி விற்பனையும் உண்டு.
இங்கு, ஊராட்சி பொறுப்பில் இருப்பவர் தான், தங்கள் பகுதியில் யார் சாராயம் விற்க வேண்டும் என முடிவு எடுப்பார். கடந்த காலங்களில், கள்ளச்சாராயம் விற்க யாரை அனுமதிப்பது என முடிவு எடுக்க, ஏலமே நடத்தப்பட்டுள்ளது. இப்படி தேர்வு செய்யப்பட்ட நபர், போலீசாரிடம் இருந்தும் சட்டவிரோத அனுமதி பெற்று விடுவார்.
அதனால், தேர்வு செய்யப்பட்ட நபரை தவிர, வேறு யாராவது விற்பனை செய்ய முயற்சித்தால், அதை கிராம நிர்வாகமும், போலீசும் தடுத்து நிறுத்தி, துரத்தி விடுவர். தற்போதைய பிரச்னையில் அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், தெருவில் வியாபாரம் செய்யும் கூலி தான்.

அவரை தவிர மூன்று பேர், சாராயம் காய்ச்சுபவர்கள் உள்ளனர். அவர்களுடன் ஒப்பந்தம் இருப்பதால், கள்ளச் சாராய மரணங்களுக்கு பின்பும், அவர்களை போலீசார் நெருங்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மரக்காணம் பகுதி மக்கள் சிலர் கூறியதாவது: காலம் காலமாக இந்த பகுதியில் கள்ளச் சாராய விற்பனை நடக்கிறது. கள்ளச் சாராய விற்பனைக்கு ஊர் மக்களும், போலீசும் ஆதரவு என்பதால், டாஸ்மாக் அதிகாரிகள் இதை, தட்டி கேட்க மாட்டார்கள். உள்ளூரில் காய்ச்சப்படும் கள்ளச் சாராயம், தரமானதாக தான் இருக்கும். கடந்த 40 ஆண்டுகளில், இது போன்ற பிரச்னை வந்ததில்லை.
சில நாட்களுக்கு முன், வேறு இடத்தில் சாராய வியாபாரியிடம் இருந்து, போலீசார், கள்ளச்சாராயத்தை பிடித்துள்ளனர். அதை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்து பல நாட்கள் ஆனதால், அந்த சரக்கு கெட்டுப்போய், விஷமாக மாறி உள்ளது அல்லது அதில் முதலிலேயே மெத்தனால் கலந்து இருந்திருக்கிறது.
அது தெரியாமல், குறிப்பிட்ட அந்த சரக்கை, உள்ளூர் சாராய வியாபாரிகளை அழைத்து விற்பனை செய்யும்படி கூறி விட்டு, அதற்காக ஒரு தொகையையும் பெற்றுள்ளனர். இந்த சாராயம் ஏற்படுத்திய விளைவு தான், பலரின் மரணத்துக்கு காரணம்.
மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வேண்டும் என்றால், கள்ளச் சாராய வியாபாரிகள், போலீசார், ஊர் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இடையேயான கூட்டணியை உடைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -