கொள்ளிடம் ஆற்றில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் உயிரிழந்த வேதபாடசாலை ஏழை மாணவர்கள் மூவரின் குடும்பத்துக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தில், 'ஆச்சார்யா ஸ்ரீமாந் பட்டர் குருகுலம்' வேத பாடசாலை உள்ளது. இங்கு கோடைகால பயிற்சிக்கு வந்த ஈரோடு, நசியனுாரைச் சேர்ந்த கோபலாகிருஷ்ணன், 17; திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணுபிரசாத், 13; ஹரிபிரசாத், 14; மற்றும் ஆந்திரா மாநிலம், குண்டூரைச் சேர்ந்த வெங்கடகிரிதர் தாய்சூரிய அபிராம், 14, ஆகியோர், ஸ்ரீரங்கம், யாத்ரி நிவாஸ் அருகில் கடந்த 14ம் தேதி அதிகாலை கொள்ளிடம் ஆற்றில் குளித்தனர்.
தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்ததால் கோபாலகிருஷ்ணன் தவிர, மற்ற மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாததே உயிரிழப்புக்கு காரணம். ஏழை மாணவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.ஸ்ரீரங்கம் நகர்நலச் சங்கத்தினர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி வக்கீல் கிேஷார் ஆகியோர் கூறியதாவது:
காவிரியில் தண்ணீர் அதிகம் வரும் போது மட்டுமே திருச்சி, முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். அப்போது திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை வாயிலாக கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்படும்.
தற்போது காவிரி ஆற்றில் கம்பரசம்பேட்டை அருகே கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடப்பதால் சில நாட்களுக்கு முன், காவிரியில் வந்த 1,903 கனஅடி நீர் அப்படியே கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடவில்லை. இதுவே, வேத பாடசாலை மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம். குளிக்கும் இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு வைத்திருந்ததாலாவது துயரம் நிகழ்ந்திருக்காது. இந்த சம்பவத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.