ப.வேலுார்: ஜேடர்பாளையம் பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் தீவைத்த சம்பவத்தையடுத்து, 14 இடங்களில், 'செக்போஸ்ட்' அமைத்து, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே,
சரளைமேடு என்ற பகுதியில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததில், 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள், கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் காரணமாக, வெல்ல ஆலைகளுக்கும், ஜேடர்பாளையம் பகுதியில், 14 இடங்களில் செக்போஸ்ட் அமைத்தும், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 20 டூவீலர்கள், நான்கு ஜீப்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம், கூடுதல் எஸ்.பி., ராஜூ தலைமையில், 8 தனிப்படை முதல் கட்டமாக அமைக்கப்பட்டது. நேற்று மேலும், 6 துணை எஸ்.பி.,க்கள் கொண்ட தனிப்படையினர், கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரியிலிருந்து, 500 போலீசார் வரவழைக்கப்பட்டு, மொத்தம், 650 போலீசார் ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலை மற்றும் கரும்பு ஆலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மேற்கு
மண்டல ஐ.ஜி., சுதாகர், கோவை டி.ஐ.ஜி., விஜயகுமார், நாமக்கல் எஸ்.பி., கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி., சக்திகணேசன் உள்ளிட்டோர், வெல்ல ஆலைகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, ஐ.ஜி., சுதாகர் கூறுகையில், ''ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பாதுகாப்புக்காக, 14 செக்போஸ்ட்கள் அமைத்து, சோதனையை தீவிரப்படுத்தியுள்ளோம். கரும்பாலை கொட்டகைக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி
வருகிறோம்,'' என்றார்.