ஈரோடு: அரசு வேலை வாங்கி தருவதாக, 4.50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தம்பதி மீது, பாதிக்கப்பட்ட இருவர் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தனர்.
ஈரோடு, கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் மரப்பாலம், 7வது சாலையை சேர்ந்தவர் மணிகண்டன், 36; எம்.இ.,பட்டதாரி. சோலார் பேனல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று ஈரோடு எஸ்.பி.,
சசி மோகனிடம் அளித்த புகார் மனு விபரம்:
எனக்கு திருமணத்துக்கு வரன் பார்க்க, மேட்டூர் சாலையில் செயல்பட்ட சக்தி திருமண தகவல் மையத்தை அணுகினோம். அதன் உரிமையாளர்களான பவானி மயிலாம்பாடியை சேர்ந்த அன்பானந்தன், 55, அவர் மனைவி கோகிலாம்பாள் அறிமுகமாகினர். அரசு அதிகாரிகள் நிறைய பேரின் பழக்கம் இருப்பதாகவும், அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக அன்பானந்தன் கூறினார்.
குறிப்பிட்ட தொகையை கொடுத்தால், கட்டாயம் அரசு வேலை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பி, கடந்த 2019 ஏப்ரலில் ஒரு லட்சம், ஜூனில், ஒரு லட்சம் என மொத்தம், இரண்டு லட்சம் ரூபாயை அன்பானந்தன், கோகிலாம்பாளிடம் வழங்கினேன். பணத்தை பெற்ற அவர்கள், தற்போது வரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திரும்ப
கேட்டாலும் அலைக்கழிக்கின்றனர். அன்பானந்தன், கோகிலாம்பாள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
* ஆப்பக்கூடலை சேர்ந்த பூவழகன், 37; எம்.ஏ., பட்டதாரி. சாயப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரும், ஈரோடு எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில், அன்பானந்தன், கோகிலாம்பாள் ஆகியோர், அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 2.50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி அன்பானந்தன் கூறுகையில்,'' இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்,'' என்றார்.