பவானி: பவானி அருகே, லட்சுமிநகரில் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி பணம் பறித்தது தொடர்ச்சியாக, பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பவானி அருகே லட்சுமி நகரில், ஈரோடு அக்ரஹாரத்தை சேர்ந்த கீர்த்தன், 35 என்பவர், பெண்கள் பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். நான்கு தினங்களுக்கு முன், இரவு, 9:00 மணியளவில் பியூட்டி பார்லரில் புகுந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து பெண்கள் மற்றும் ஆண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டு பணம் பறித்து சென்றனர்.
இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த கார்த்திக், பெரியவலசை சேர்ந்த கவுதம் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே பியூட்டி பார்லரில் பணிபுரிந்த லட்சுமிநகர் கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த தேவிகாஸ்ரீ, 19 பணம் பறிக்கும் நோக்கத்தில் மூளையாக செயல்பட்டது தெரிந்தது. இதை தொடர்ந்து தேவிகாஸ்ரீ, கார்த்திக், கவுதம் ஆகியோர் சிறையிலும், 17 வயது சிறுவன் கோவை கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பியூட்டி பார்லர், மசாஜ் சென்டரை மூட போலீசாரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பவானி டி.எஸ்.பி., அமிர்த்வர்ஷினி, உத்தரவின்படி, பியூட்டி பார்லர் மூடப்பட்டது.