செய்திகள் சில வரிகளில்... கரூர்

Added : மே 17, 2023 | |
Advertisement
கழிவுநீர் உறிஞ்சு குழியைசீரமைக்க மக்கள் கோரிக்கைவயலுார் பஞ்சாயத்து பகுதியில், உறிஞ்சு குழியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்து, வயலுாரில் சாலையோரங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக கழிவுநீர் பாய்ந்துவருகிறது. கால்வாய் முடிவில் உறிஞ்சு

கழிவுநீர் உறிஞ்சு குழியை
சீரமைக்க மக்கள் கோரிக்கை
வயலுார் பஞ்சாயத்து பகுதியில், உறிஞ்சு குழியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்து, வயலுாரில் சாலையோரங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக கழிவுநீர் பாய்ந்துவருகிறது. கால்வாய் முடிவில் உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உறிஞ்சு குழியில் கழிவு நீர்சென்று கலக்கிறது. கலக்கும் கழிவுநீர் குழியில் உறிஞ்சாமல் தேங்கி நிற்கிறது. இதனால், கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் உறிஞ்சு குழியை சீரமைக்க, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழந்த வக்கீல் குடும்பத்துக்கு
ரூ.7 லட்சம் சேமநல நிதி வழங்கல்
லாலாபேட்டையை சேர்ந்தவர் வக்கீல் பெரியசாமி; இவர் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும், 1999லிருந்து குளித்தலை, முசிறி, கரூர் நீதிமன்ற வழக்குகளில் வாதாடி வந்தார். கடந்த மூன்றாண்டுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். குளித்தலை வக்கீல் சங்கம் சார்பில், தமிழக அரசு வழங்கும் சேமநலநிதிக்கு பரிந்துரை செய்தனர்.
நேற்று காலை, 11:30 மணியளவில் வக்கீல் சங்கம் சார்பில், உயிரிழந்த வக்கீல் பெரியசாமி குடும்பத்தாருக்கு, சேம நலநிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது, சங்க செயலாளர் நாகராஜன், சங்க பொறுப்பாளர்கள் தமிழ்செல்வன், முருகேசன், ரத்தினம் ஆகியோர், உயிரிழந்த பெரியசாமியின் மனைவி மற்றும் மகளிடம், 7 லட்சம் ரூபாய்க்கான
காசோலையை வழங்கினர்.

சுக்காம்பட்டி மண் சாலை
படுமோசம்: மக்கள் அவதி
சுக்காம்பட்டி மண் சாலை படுமோசமாக இருப்பதால், கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்.,க்குட்பட்ட உடையகுளத்துப்பட்டியிலிருந்து, சுக்காம்பட்டி கிராமத்திற்கு செல்லும் மண் சாலை உள்ளது. இந்த சாலை நடுவே மழைநீர் பாய்ந்தோடும் வாரி செல்கிறது. இந்த வாரி வழியாக, மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து சென்று வருகின்றனர். தற்போது, வாரி பகுதியில் மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இந்த மண் சாலை வழியாக மக்கள் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த மண் சாலையை, கிராம மக்கள் எளிதாக சென்றுவரும் வகையில் சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளைபொருட்களை

தரம் பிரிக்க 'களம்' தேவை
பழையஜெயங்கொண்டம் பகுதியில் விவசாய களம் இல்லாததால், விளை பொருட்களை நெடுஞ்சாலையில் கொட்டி தரம் பிரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்., பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் எள், சோளம், துவரை, சூரியகாந்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. விவசாய விளை பொருட்களை தரம் பிரிப்பதற்கும், உலர்த்துவதற்கும், பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்.,ல் களம் இல்லாததால், பழையஜெயங்கொண்டம்-பஞ்சப்பட்டி நெடுஞ்சாலை பாலம் அருகே, விவசாய விளை பொருட்களை கொட்டி தரம் பிரித்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்தேர் வடம்பிடித்த நாள்
மாரியம்மனுக்கு அபிஷேகம்
குளித்தலை பகுதியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த நான்காண்டுகளாக புனரமைப்பு பணி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் திருவிழா காலங்களில், திருத்தேர் வடம்பிடித்து பக்தர்கள் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். அதன்படி, திருத்தேர் வடம்பிடிக்கும் நாளான நேற்று, மாரியம்மனுக்கு கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தினர். சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

போட்டி தேர்வு இலவச பயிற்சி
விண்ணப்பிக்க அழைப்பு
'போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், நான் முதல்வன் திட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ரயில்வே தேர்வு குழுமம், வங்கி பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெற ஏதுவாக இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 20ம் தேதிக்குள் மாணவ, மாணவியர், தங்களின் விவரங்கள் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சி வகுப்பு வரும், 25 முதல் துவங்குகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

பூ சாகுபடி பணியில்
விவசாயிகள் தீவிரம்
மாவட்டத்தில் பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், கரூர், தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் உள்பட பல்வேறு ஒன்றியங்களில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கோழிக்கொண்டை, செண்டு
மல்லி, விரிச்சிப் பூ, ரோஜா ஆகிய பூ சாகுபடி நடந்து வருகிறது. இங்கு, ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பூக்களை பறித்து கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.
தற்போது கோவில் திருவிழா நடந்து வருவதாலும், தொடர்ந்து திருமண முகூர்த்தம் இருப்பதாலும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீவிரமாக சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாயனுார் கதவணைக்கு
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 898 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,130 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது.
அமராவதி அணை நிலவரம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 87 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால், அமராவதி ஆறு, புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 62.11 அடியாக இருந்தது.

மாற்றுத்திறனாளிகள்

சிறப்பு குறைதீர் முகாம்
மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நேற்று நடந்தது. அதில், 25க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம், கரூர் ஆர்.டி.ஓ., ரூபினா மனுக்களை பெற்றுக்கொண்டார். தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர், கைப்பிடி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மண்மங்கலம் தாசில்தார் குமரேசன் உள்ளிட்ட வருவாய் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர்
அடையாளம் தெரிந்தது
கரூர் அருகே, ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வாலிபர் குறித்த, விபரம் தெரிந்தது.
கரூர்-வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷன் களுக்கு இடையில், அடையாளம் தெரியாத, வாலிபர் நேற்று முன்தினம் காலை, ரயிலில் அடி பட்டு உயிரிழந்தார். அவர், நடிகர் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் என, அச்சிடப் பட்ட, பனியனை அணிந்திருந்தார். இதுகுறித்து, நமது நாளிதழிலில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, இறந்த வாலிபரின் உறவினர்கள், கரூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொண்டனர். ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வாலிபர், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன், 21, என, தெரியவந்தது. பெயின்டர் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, மனைவியும், நான்கு மாத குழந்தையும் உள்ளது என, கரூர் ரயில்வே போலீசார், நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அய்யர்மலை கோவிலில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்
குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி நடந்தது.
இக்கோவில் செங்குத்தாக, 1,017 படிகளை கொண்டது. தற்போது ரோப்கார் பணி முடியும் தருவாயில் உள்ளது. கோவில் மலை உச்சியில், உள் மண்டபத்தில் இருந்த 'சிசிடிவி' கேமரா பழுது ஏற்பட்டது. இந்நிலையில் புதிய கேமரா பொருத்தும் பணிக்காக, பழைய சிற்பங்கள் சேதம் ஏற்படாத வகையில், பாதுகாப்புடன் பொருத்தும் பணி நடந்தது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அனிதா கூறியதாவது: மலைக்கோவில் உள் பகுதியில் 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி நடந்தது. பாதுகாப்புடன், சிற்பங்கள் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தங்க நகை மோசடி செய்ய முயன்றவர் கைது
கரூரில் எம்.எல்.எம்., முறையில், தங்க நகை மோசடி செய்ய முயற்சி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் லட்சுமி ஏஜென்சி என்ற பெயரில், அரை கிராம் தங்கத்துக்கு பணம் செலுத்தினால், 30 நாட்களில், ஒரு கிராம் தங்கம் தரப்படும் என, விளம்பரம் செய்வதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து போலீசுக்கு தகவல் சென்றது. இதையடுத்து, கரூர் இன்ஸ்பெக்டர் விதுன் குமார் தலைமையில், தனிப்படை போலீசார் தங்க நகை மோசடி குறித்து விசாரித்தனர்.
அப்போது, கரூர் வடக்கு காந்தி கிராமம் முத்து
நகரை சேர்ந்த கஜேந்திரன் மகன் கண்ணன்,47;, தங்க நகை மோசடி திட்டத்தை எம்.எல்.எம் (பல அடுக்கு வணிகம்) செயல்படுத்தி, பணத்தை பெற்றுக் கொண்டு தலை
மறைவாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கண்ணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஹிந்து முன்னணி
மாவட்ட செயற்குழு கூட்டம்
கரூர் மாவட்ட ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி தலைமையில் பள்ளப்பட்டியில் நடந்தது.
அதில், கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், பல்வேறு கிராமங்களில் இருந்து வரும், பக்தர்கள் வீடு திரும்ப இரவு நேரங்களில், அதிகளவில் பஸ்களை இயக்க வேண்டும், வரும் ஜூன் மாதம் சத்ரபதி சிவாஜி முடி சூட்டிக்கொண்ட நிகழ்வை, ஹிந்து சாம்ராஜ் தின விழாவாக கொண்டாடுவது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில ஹிந்து முன்னணி துணைத்தலைவர் சண்முக சுந்தரம், திருச்சி கோட்ட பொறுப்பாளர் கனகராஜ், மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ராஜலிங்கம், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

கரூர் அருகே
சாலை மறியலில்
ஈடுபட்டவர்கள் கைது
கரூர் அருகே, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ், 48. இவர், கால் நரம்பு பகுதியில் ஏற்பட்ட, ரத்தக்கசிவு நோயால் நேற்று முன்தினம் காலை, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். ஆனால், துரைராஜ் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்நிலையில், உரிய முறையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை என, கூறி, உயிரிழந்த துரைராஜின் உறவினர்கள், 10 க்கும் மேற்பட்டவர்கள் கரூர்-திருச்சி சாலை, காந்தி கிராமத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர். இதனால், கரூர்-திருச்சி சாலை காந்தி கிராமத்தில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மின் கம்பியை மிதித்த
விவசாயி பலி
வாங்கல் அருகே, கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, விவசாயி மின்சாரம் தாக்கியதில் பலியானார்.
கரூர் மாவட்டம், வாங்கல் அருகே சோமூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 70; விவசாயி. இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள, தங்கராசு தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முத்துசாமி, மின்சாரம் தாக்கியதில், அதே இடத்தில் உயிரிழந்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

முனியப்ப சுவாமி கோவில் திருவிழா
கரூர் அருகே நடந்த, முனியப்ப சுவாமி கோவில் திருவிழாவில், 100 க்கும் மேற்பட்ட ஆடுகளின் ரத்தத்தை பூசாரி குடித்தார்.
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் முனியப்பனுாரில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் முனியப்பசுவாமி கோவில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு நேற்று முன்தினம், காவிரி யாற்றில் இருந்து, தீர்த்தக்குடம் ஊர்வலத்துடன் விழா தொடங்கியது.
பிறகு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூ அலங்காரம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, முனியப்ப சுவாமி கோவிலை சுற்றி வேல் வீதி உலா நடந்தது. பிறகு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கொண்டு வந்த, 100 க்கும் மேற்பட்ட ஆடுகளின் கழுத்தை கடித்து, பூசாரி பழனியப்ப சுவாமி ரத்தம் குடித்தார். தொடர்ந்து, அரிவாள் மீது நின்று பூசாரி பழனியப்ப சுவாமி, பக்தர்களுக்கு அருள் வாக்கு தெரிவித்தார். விழாவில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மாரியம்மன் கோவிலில்
படிக்கட்டுகள் அமைப்பு
கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக தற்காலிகமாக, படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த, 14ல் கரூர் மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கம்பம் நடுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, நாள்தோறும்
கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றுதல், அங்கபிரதட்ணம் செய்தல் உள்ளிட்ட வழிபாடுகள் காலை, 7:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை நடந்து
வருகிறது. மேலும், நாள் தோறும்
உற்சவர் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடக்கிறது.
இந்நிலையில், கோவிலுக்கு பக்தர்
கள் கூட்டம் அதிகளவில் வர துவங்கியுள்ளதால், நுழைவு வாயிலில், நெரிசலை தவிர்க்க இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கருவறைக்கு செல்லும் பக்தர்கள், படிக்கட்டுகள் வழியாகவும், கோவிலில் இருந்து வெளியே செல்லும் பக்தர்கள், படிக்கட்டின் கீழ் பகுதியிலும், நெரிசலில் சிக்காமல் எளிதாக நடந்து செல்லலாம்.
மேலும், அங்கபிரதட்சணம் செய்யும் பக்தர்கள், சிக்கல் இல்லாமல் நேர்த்திக்கடன் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,
பக்தர்கள் எந்தவிதமான தடையும் இல்லாமல், வரிசையில் நின்று கரூர் மாரியம்மன் கோவிலில், சுவாமியை வழிபட முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X