கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் 135 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும்,
மஜத 19 இடங்களிலும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த முறை ஆட்சியிலிருந்த பாஜக தோல்வியை
சந்தித்தது. இது கர்நாடகா மாநிலம் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாஜக தோல்விக்கு மக்கள் விரோத போக்கே
காரணம் எனக் காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன.
குறிப்பாக
பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் தேர்தலில் தோற்றது அக்கட்சிக்கு பெரும்
பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அதிக
பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் மேலிடத்திற்கு தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து குழப்பத்தில் உள்ளது. கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையா மற்றும் டி.கே சிவக்குமார் ஆகிய இருவரில் யாரை முதல்வராக அமரவைப்பது என்பது தான் இந்த குழப்பம். அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருவரையும் டெல்லிக்கு அழைத்து தனித் தனியாகப் பேசியும் இந்த குழப்பத்திற்கு தீர்வு எட்டவில்லை.
![]()
|
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தேவைப்பட்டால் முதல்வர் பொறுப்பை என்னிடம் கொடுக்கும். 135 எம்எல்ஏ-க்களும் ஒற்றுமையாக உள்ளோம். காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் இடையே பிளவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. கட்சி தான் எனது கடவுள். இதில் தனி ஆள் நான் இல்லை. நான் பொறுப்புள்ள மனிதன். யாரையும் முதுகில் குத்தமாட்டேன். மிரட்டவும் மாட்டேன். என டி.கே சிவக்குமார் தெரிவித்திருந்தார். ஆனால் சித்தராமையா முதல்வர் பதவி குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பரமேஷ்வர், கட்சி மேலிடம், முதல்வர் பொறுப்பை அளித்தால் அதை ஏற்றுக் கொள்ள தயார் எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக பரமேஷ்வரின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படி மூன்று தலைவர்கள் முதல்வர் பதவிக்குப் போட்டியில் உள்ளதால் காங்கிரஸ் மேலிடம் குழப்பத்தில் உள்ளது.
தேர்தல் முடிந்து ஐந்து நாட்களை கடந்தும் முதல்வர் யார் எனத் தேர்ந்தெடுக்காததால், #KarnatakaCM என்ற ஹேஷ் டேக் இணையத்தில் வைராகியுள்ளது. இந்த ஹேஷ் டேக் கீழ் தங்களுக்கு ஆதரவான எம்எல்ஏ-க்களுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை 20.2K பயனர்கள் தங்களது கருத்துகளையும், கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.