புதுடில்லி: புதுடில்லியில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற, ஏர் இந்தியா விமானம் நடுவானில், காற்றழுத்த மாறுபாடு காரணமாக குலுங்கியதில், பயணிகள் அலறி சத்தம் போட்டனர். 7 பேர் லேசான காயமடைந்தனர்.

டில்லியிலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ-302 எண் உடைய விமானம் இன்று(மே 17) ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் செல்லும் வழியில், ஏற்பட்ட காற்றழுத்த மாறுபாடு காரணமாக, விமானம் சிறிது நேரம் குலுங்கியது. இதில் 7 பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் பயணித்த மருத்துவர்களின் உதவியுடன் காயமடைந்தவர்களுக்கு விமான பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து, சிட்னி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் 3 பேருக்கு மட்டும் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. அவர்களுக்கு விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரச்னை சிறிது நேரத்தில் சரியானதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகளின் உயிருக்கு எந்த சேதமும் இல்லை.

சமீபத்தில் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை திடீரென நடுவானில் வைத்து தேள் ஒன்று கொட்டியது. இதில் அவர் வலியால் துடித்தார். இதன் பின்னர், விமானம் தரையிறங்கியதும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.