மே 18, 1881
திருப்பூரில், அங்கப்ப செட்டியார் - மீனாட்சி தம்பதிக்கு மகனாக, 1881ல் இதே நாளில் பிறந்தவர், ராமலிங்கம் செட்டியார். இவரின் தந்தை பிரபலமான பருத்தி வர்த்தகர். கோவையில் பள்ளிப் படிப்பையும், பின், சென்னையில் சட்டப் படிப்பையும் முடித்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். சென்னை மாகாணத்தில், கூட்டுறவு இயக்கம் வளர பாடுபட்டார்.
தமிழக கூட்டுறவு கூட்டமைப்பை உருவாக்கி, 'கூட்டுறவு' என்ற இதழையும் நடத்தினார். கோவையில் கூட்டுறவு பயிற்சி பள்ளியையும் நடத்தினார். கோவையில், மத்திய கூட்டுறவு வங்கி, நகர்ப்புற வங்கி, நில வளர்ச்சி வங்கி, பால் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு அச்சகம் போன்றவை உருவாக காரணமாக இருந்தார். கோவை மாவட்ட மன்ற துணைத் தலைவர், மாநகராட்சி தலைவர் பதவிகளை வகித்தார். நீதிக்கட்சி, காங்கிரஸ் கட்சிகளில் இருந்த இவர், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்துக்கு தேர்வானதுடன், எம்.பி.,யாகவும் பதவி வகித்தார். இவர், ௧௯௫௨ல் தன், 71வது வயதில் மறைந்தார்.
தன் பெயரில் உள்ள கல்வி நிலையங்களால் நிலைத்துள்ள, தி.அ.ராமலிங்கம் செட்டியாரின் பிறந்த தினம் இன்று!