ஆவடி:ஆவடி அடுத்த, முத்தா புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சின்ன நாகையா, 55; ஆலிம் முகமது சலேக் பொறியில் கல்லுாரியில், பேருந்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவரது இளைய மகன் நவீன், 21.
அதே கல்லுாரியில் டிப்ளமா முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவர், நேற்று காலை 7:35 மணி அளவில், கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, உழைப்பாளர் நகரில் உள்ள 'எஸ்.சி., கேட்டை' கடக்க முயன்றபோது, பட்டாபிராமில் இருந்து, சென்னை வந்த மின்சார ரயில் மோதி உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, ஆவடி --- அண்ணனுாரில், ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.